Home Photo News சுய முன்னேற்றவாதி – தனிமனிதப் போராளி – துன் சாமிவேலுவின் அறியப்படாத சில பக்கங்கள்

சுய முன்னேற்றவாதி – தனிமனிதப் போராளி – துன் சாமிவேலுவின் அறியப்படாத சில பக்கங்கள்

557
0
SHARE
Ad

(கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி காலமான துன் ச.சாமிவேலு குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இரா.முத்தரசன்)

துன் சாமிவேலுவின் பிறந்தநாள் நிகழ்ச்சி – ஒருமுறை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டபோது அமரர் டான்ஸ்ரீ சுப்ராவும் அந்த நிகழ்ச்சியில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். இருவரும் அரசியலில் நெருக்கம் பாராட்டிக் கொண்டிருந்த காலகட்டம் அது.

சாமிவேலுவைப் புகழ்ந்து வர்ணிக்க பின்வரும் குறளை மேற்கோள் காட்டிப் பேசினார் சுப்ரா:

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

“சாமிவேலு பேச்சில் வல்லவர். சோர்விலாது பணியாற்றக் கூடியவர். யாருக்கும் அஞ்சாமல் எந்த சூழ்நிலையிலும் எதிர்த்துப் போரிடும் குணாதிசயம் கொண்டவர். அப்படி இருக்கும் ஒரு மனிதனை எதிர்த்து யாரும் வெல்ல முடியாது என்கிறார் வள்ளுவர்.  அது உண்மைதான்! நானே அவரை இருமுறை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றுவிட்டேன் என்றால் பாருங்களேன்” என்ற தோரணையில் சுப்ரா பேசி முடித்தபோது பலத்த கைதட்டல்கள். (1977-ஆம் ஆண்டில் மஇகா துணைத் தலைவருக்கான போட்டியிலும், 1989-இல் மஇகா தேசியத் தலைவருக்கான போட்டியிலும் சாமிவேலுவுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார் சுப்ரா)

#TamilSchoolmychoice

சாமிவேலு மரணமடைந்த செய்தி கேட்டு அவருக்கு இறுதி மரியாதை செய்ய அவரின் இல்லம் சென்று நல்லுடலைக் கண்டபோது, கடந்த காலங்களில் அவருடனான அரசியல் முரண்பாட்டு மோதல்கள் நினைவுக்கு வரவில்லை.

மாறாக, அந்த தனிமனிதனின் கடுமையான உழைப்பு – அதிகாலையில் எழுந்து நள்ளிரவு தாண்டி, சோர்விலாது பணியாற்றும் தன்மை – மணிக்கணக்காக உரையாற்றினாலும் பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் தன்பக்கம் ஈர்க்கும் பேச்சாற்றல் – சக தலைவர்கள் முதற்கொண்டு சாதாரணத் தொண்டர்கள்வரை அனைவரையும் கடுமையாகத் திட்டியும், சிரித்துச் சிரித்துப் பேசியும் அரவணைத்துச் செல்லும் பண்பு – மஇகாவில் நடக்கும் அடிமட்ட சிறுசிறு அரசியல் சம்பவங்களையும் மூன்றாம் தரப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளும் கட்சி ஈடுபாடு – சாதாரண கிளைத் தலைவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் அற்புத நினைவாற்றல் – இப்படியாக அவரின் எண்ணற்ற தனிமனித குணாதிசயங்கள்தான் நினைவில் நிழலாடின.

அவரின் அந்த திறக்கப்படாத – பெரும்பாலும் அறியப்படாத – சில பக்கங்களை – நான் நேரடியாக அனுபவரீதியாக கண்ட – மற்றவர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய – அவரின் சில குணாதிசய அம்சங்களை – இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

டேல் கார்னகியின் மாணவர் என்ற பெருமிதம் கொண்டவர்

டேல் கார்னகி

டேல் கார்னகி (Dale Carnagie) என்பவர் ஒரு மனிதன் எவ்வாறு சுயமுன்னேற்றம் அடைவது – தன் உள்மன ஆற்றலைக் கண்டு கொண்டு எவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெறுவது – என்பது போன்ற தத்துவங்களைப் போதித்தவர். 1955ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். அமெரிக்க அதிபர்கள் சிலருக்கு ஆலோசகராகச் செயல்பட்டவர். அவரின் பயிற்சி முறைகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

“நான் டேல் கார்னகியின் மாணவன்” என பெருமிதத்துடன் பல முறை சாமிவேலு மேடைகளிலும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும் குறிப்பிடுவார். டேல் கார்னகியின் தத்துவங்களையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.

அவரைப் பின்பற்றியதாலோ என்னவோ, ஒவ்வொரு விஷயத்திலும் தனது சுய முன்னேற்றம், தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்வது – தன்னை எப்படி உருமாற்றிக் கொள்வது – என தனி அக்கறைக் கொண்டு செயல்பட்டவர் சாமிவேலு.

முதன் முதல் சந்திப்பு

செந்தூல் வட்டாரத்தில்  ரயில்வே யூனியன் மண்டபம் ஒன்று ஜாலான் ஹாஜி சாலே அருகில் அந்தக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இப்போது இல்லை. அடிக்கடி அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஒரு முறை இலவச மேடை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற வேளையில், அந்த கூட்டத்தில்  பேசுவதற்கு சாமிவேலு வந்திருந்தார். அப்போது, 1977 காலகட்டமாக இருக்கலாம். ‘பிங்க்’ எனப்படும் வெளிர் சிவப்பு நிறத்தில் ஒரு புஷ் ஜாக்கெட் அவர் அணிந்திருந்தது இப்போதும் நினைவில் பசுமையாக இருக்கிறது. அப்போதெல்லாம் புஷ் ஜாக்கெட்தான் அரசியல் தலைவர்களின் பிரபல உடையாக இருந்தது.

அந்த கூட்டத்தில்  அவர் அனைவரும் ரசிக்கும்படி நகைச்சுவையோடும் கவரும் வண்ணமும் உரை நிகழ்த்தியதும் நினைவில் நிழலாடுகிறது. அப்போதெல்லாம்  மிகச் சாதாரண உடைகளோடு கட்சிக் கூட்டங்களில் வலம் வந்த அவர், பிற்காலத்தில்  தலைவரானதும் – அமைச்சரானதும் – தனக்கே உரிய வித்தியாச பாணியில் உடைகளை அணிய ஆரம்பித்தார்.

சில கோட் வடிவங்களை அவரே தனது பருமனான உடல்வாகுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொண்டார். அந்தப் புதிய பாணி உடைகள் அவருக்குப் பொருத்தமாகவும் இருந்தன. சட்டை போன்ற பட்டன் போட்ட கோட் போட்டு, வெளியே முழுக்கை சட்டையின் காலர் மட்டும் கழுத்துப் பக்கம் தெரியும் வண்ணம் அவர் ஆடை அணிந்தது பிரபலமாகத் தொடங்கியது.

டான்ஸ்ரீ பண்டிதனுடன்…

வெளிநாடு சென்று திரும்பும்போதெல்லாம் தன்னை வரவேற்க வரும் ஆதரவாளர்களிடம் இந்த கோட் வெளிநாட்டில் தைக்கப்பட்டது – இத்தனை டாலர் விலை – என பெருமிதத்துடன் கூறுவார்.

அதனை அவரின் தனி மனித தோற்ற மேம்பாடு என்ற ரீதியில்தான் பார்க்க வேண்டுமே தவிர, சொகுசுக்காக – பணக்காரத்தனத்துக்குக்காக அவர் அப்படி செய்தார் எனக் கூற முடியாது.  தன் தோற்றத்தை சிறந்த முறையில், உயர்தர ஆடைகளோடு காட்டிக் கொள்ள விரும்பினார்.

கட்டட வடிவமைப்பாளர் அலுவலகத்தில் அலுவலகப் பையனாக வாழ்க்கையைத்தொடங்கியவர் தான் பல்வேறு சாதாரண வேலைகளை செய்திருப்பதாக பல முறை கூறியிருக்கிறார். எனவே, தன் வளர்ச்சியைக் காட்டும் விதத்தில்தான் அவர் உடை அணிந்தார். அது மட்டுமல்ல  அந்த உடைகளை ஒரு நேர்த்தியோடும் கொஞ்சம் கூட கசங்காமலும்  அவர் அணிந்து வந்தார்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது, சட்டையின் காலர்களை அவரே இஸ்திரி பெட்டிக் கொண்டு  சரி செய்து விட்டுத்தான்  கிளம்புவார் என்று கூறுவார்கள்.

நிமிர்ந்த நடை

எப்போதுமே அவர் கம்பீரமாக உடல் வளையாமல் தனது முதுகை நேராக நிமிர்த்தி  நிற்பார், நடப்பார். அவரது தோற்றத்திற்கு அதுவே ஒரு மரியாதையையும் சிறிய அச்சுறுத்தலையும் தரும்.

ஒரு முறை ஒரு நிகழ்ச்சியின்போது என்னைப் பார்த்து, “முத்தரசு! நீங்கள் முதுகு வளைந்து நிற்கிறீர்கள். என்னைப் பாருங்கள். நான் எப்போதும் நிமிர்ந்துதான் நிற்பேன்.  கூன் வளைந்து நிற்கமாட்டேன்” என்று கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது. அவர் சொன்னபடி அதைப் பின்பற்றினேனா என்பது வேறு விஷயம்.

அதேபோல, அவருடைய வீட்டில் சில சமயங்களில் அவரைச் சந்தித்தபோதும், அவருக்கே உரிய ஒரு நாற்காலியில் அமர்ந்துதான் பேசுவார். அந்த நாற்காலிக்கு பின்பக்கம் சாய்ந்துகொள்ளும் வசதி இருக்காது. அதன் காரணமாக, முதுகை நேராக வைத்துக் கொண்டுதான் அவர் வந்திருப்பவர்களுடன் உரையாடுவார்.

“யாரை முதலில் பார்க்க வேண்டும் என நான்தான் முடிவு செய்வேன்”

முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியத்துடன்…

அவர் கடுமையாகப் பேசுவது போல் தோன்றினாலும், சாதாரண கட்சிக்காரர்களுக்கு காட்டும் மரியாதை அளப்பரியது. டான்ஸ்ரீ சுப்ரா உடல்நலம் குன்றிய பிறகு சாமிவேலுவை சில காரணங்களுக்காகப் பார்க்க அவரின் இல்லம் சென்றிருக்கிறேன். அப்போது ஒருமுறை எனக்கு முன்னால் வந்து விட்ட சிலர் கோட், சூட் அணிந்து அவருக்காகக் காத்திருந்தனர். பார்க்க வணிகப் பிரமுகர்கள் போல் தெரிந்தனர்.

சாமிவேலு மாடியிலிருந்து இறங்கியதும் நேரே என்னை நோக்கி வந்தார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. “டத்தோஸ்ரீ அவர்கள்தான் முதலில் வந்தனர். முதலில் அவர்களைப் பார்த்துவிடுங்கள். நான் காத்திருக்கிறேன்” என்றேன்.

சட்டென்று கோபப்பட்டார். “நான் யாரை முதலில் பார்க்க வேண்டும் என நீங்கள் நிர்ணயிக்காதீர்கள். அதை நான்தான் முடிவு செய்வேன். இப்போது சொல்கிறேன். உங்களைத்தான் முதலில் பார்க்கப் போகிறேன். வாருங்கள்” என்று என்னைத் தனியே அழைத்துச் சென்று பேசி அனுப்பி விட்டு அதன் பின்னரே வந்திருந்த மற்றவர்களைச் சந்தித்தார்.

உடற்பயிற்சியில் அக்கறை – ஈடுபாடு

தேசியத் தலைவரான பின்னும் – அமைச்சராக வேலைப் பளுவுக்கு இடையிலும் அவர், உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். அம்பாங் வட்டாரத்திலுள்ள ‘ரெயின் ட்ரி’ (Rain Tree) கிளப்பில்  அடிக்கடி சென்று நீண்ட நேரம் நீச்சலடிப்பார்.

ஒருமுறை சாமிவேலுவை சந்திக்க அங்கு சென்ற டான்ஸ்ரீ சுப்ரா, தொடர்ந்து 32 தடவைகள் (Laps) நீச்சல் குளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை அவர் நீந்துவதை நேரடியாகப் பார்த்த்தாக சுப்ராவே கூறினார். அதேபோல நீச்சலடித்த பின்னர் சாமிவேலு நன்றாக அசைவ உணவுகளைச் சாப்பிடுவார்.

பிற்காலத்தில்  ஏனோ சில சொந்தக் காரணங்களால் அவர் முழுக்க முழுக்க சைவ உணவுக்கு மாறிவிட்டார்.

தற்போது அவர் மரணமடைந்த ஜாலான் ஈப்போ சாலை இல்லத்தை அவர் கட்டியபோது, அங்கு நீச்சல் குளம் வைத்துக் கட்டினார்.

அதிகாலையிலேயே எழுந்து தன் வீட்டில் நீச்சலடிக்கும்  வழக்கத்தையும்  அவர் பல ஆண்டுகளுக்குக் கொண்டிருந்தார்.

வீட்டிலுள்ள தனது அறையில் அவர் நவீன உடற்பயிற்சி கருவிகளைக் கொண்டு உடற்பயிற்சி கூடமொன்றையும் அமைத்திருந்தார்.

அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டியவர்

தனது தோற்றத்திற்கு முக்கியத்துவம் தந்தது போல, தனது அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதிலும் அவர் தீவிரம் காட்டினார். அவர் நாடாளுமன்ற  உறுப்பினர் ஆன காலகட்டத்தில் அவரின் மலாய் மொழி  மேடைப்பேச்சு அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வீட்டிலேயே மலாய் ஆசிரியர் ஒருவரைக் கொண்டு தன் மலாய்மொழித் திறனை வளப்படுத்திக் கொண்டார்.

அமைச்சரான காலத்தில் அவர் எத்தனை நிமிடங்களானாலும் நாடாளுமன்றத்திலும் நிகழ்ச்சிகளிலும் தங்குத் தடையின்றி மலாய் மொழியில் உரையாற்றும் ஆற்றல் அவர் அவ்வாறு வளர்த்துக் கொண்டதுதான்!

முறையான பள்ளிக் கல்வியின் மூலம் ஆங்கில கல்வியைப் பெறாவிட்டாலும்  ஆங்கில மொழியிலும் அவர் தனது திறனை வளர்த்துக் கொண்டார்.

ஒரு முறை செந்தூல் தமிழ்ப்பள்ளியில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொள்ள வந்திருந்தார். அப்போது தேசியத் தலைவராகிவிட்டார்.

அருகிலிருந்து என்னிடம் தனது சூட்கேஸ் பெட்டியைத் திறந்து காட்டி அதிலிருந்து ஒரு சிறிய டிரான்சிஸ்டர் வானொலியை எடுத்தார்.

“இது சிறியதாக இருந்தாலும் 12 பேண்ட் ஆற்றல் கொண்டது. இதை சிங்கப்பூரில் வாங்கினேன். இதன் மூலம்தான்  பிபிசி ஆங்கில செய்திகளை நான் தினமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

பொதுவாக ஆங்கில மொழி ஆற்றலை உச்சரிப்பை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் பிபிசி  செய்திகளை கேட்க வேண்டும் எனக் கூறுவார்கள்.

அதை அப்போதே செய்தவர் சாமிவேலு.

பின்வரிசையில் நிற்கிறார் கோவிந்தராஜ் – முன்வரிசையில் சாமிவேலு – வளரும் கலைஞர்கள் நாடக மன்றம் (1965) – படம் உதவி: கே.விஜயசிங்கம்

காலவோட்டத்தில கணினி என்றும் ஐபேட், கைப்பேசி என்றும் தகவல் தொழில்நுபட்பம் என மாறியபோது அதற்கேற்ப தன்னையும் மேம்படுத்திக் கொண்டார்.

அவரின் வயதிற்கும் வகித்த பதவிகளுக்கும்  அவர் தனது செயலாளர்களிடம் அத்தகைய வேலைகளை ஒப்படைத்திருக்கலாம். ஆனால், அவரே ஐபேட், கணினி போன்றவற்றைக் கையாளும் திறனை வளர்த்துக்கொண்டார்.

அதிகாலையில் எழும் பழக்கமுள்ளவர்

சாமிவேலு மஇகாவினரை – கிளைத் தலைவர்களை எந்த நேரத்திலும்  அழைப்பார். நள்ளிரவு தாண்டி அவர், பல முறை பலரை அழைத்து உரையாடியிருக்கிறார். அதேபோல அதிகாலையிலும்  அவர் தொலைபேசியினால் அலறியடித்துக் கொண்டு தூக்கம் கலைந்து எழுந்த கிளைத் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் நிறைய பேர் உண்டு.

அதிகாலை ஐந்தரை  மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன் என அவர் பகிரங்கமாக அடிக்கடி கூறியிருக்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு தான் குறிப்பிடும் நேரத்தில் சரியாக சென்று நேரும் வழக்கத்தையும்  அவர் இறுதிவரை கொண்டிருந்தார்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால், இத்தனை மணிக்கு வருகிறேன் என்று அவர் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால், அதற்கேற்ப சரியாக குறிப்பிட்ட நேரத்திலோ அதற்கு முன்பாகவே வந்துவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

யாருக்கும் அஞ்சாத போராட்ட குணம்

ஓர் அரசியல் போராளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அகராதியே சாமிவேலுதான்! டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தேசியத் தலைவரான காலகட்டத்தில் அரசாங்கத்திலும், கட்சியிலும் மாணிக்கா மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருந்தார். சாமிவேலுவோ சாதாரண – வளர்ந்து வரும் ஓர் இளம் தலைவர் – அவ்வளவுதான்! ஆனால், தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்றதும் தனிமனிதனாக, வந்தது வரட்டும் என அஞ்சாமல் தன் அரசியல் போராட்டத்தை நடத்தினார். “நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் பத்து பேர் என்னுடன் வந்தால்கூட போதும். எனது போராட்டத்தை நானே பார்த்துக் கொள்வேன்” என சாமிவேலு அந்தக் காலகட்டங்களில் கூறியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

டான்ஸ்ரீ சுப்ரா குறித்து சாமிவேலுவுக்கு ஏற்பட்ட மனமாற்றம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது துன் சாமிவேலு-டான்ஶ்ரீ சுப்ரா – தீனா சுப்பிரமணியம்

அமரர் டான்ஸ்ரீ சுப்ரா உடல்நலம் குன்றிய பின்னர் சாமிவேலுவுக்கு அவர் மீதான எண்ணமும் மாறியது என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அரசியலில் இருவரும் எதிரும் புதிருமாக இறுதிவரை மோதிக் கொண்டனர். என்றாலும் அவர்கள் இணைந்திருந்த சில கட்டங்களில் அவர்களுக்கிடையே நிலவிய அந்நியோன்யமும், பாசப் பிணைப்பும் அவ்வளவு நெருக்கமானது என்பதை நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

மஇகா தேசியத் தலைவர் பதவியில் இல்லாதபோது ஒருமுறை எம்ஐஇடி தொடர்பாக சாமிவேலுவைப் பார்க்க அவரின் இல்லம் சென்றிருந்தேன். அப்போது சுப்ராவும் உடல்நலம் குன்றியிருந்த நேரம். என்னை எம்ஐஇடி நிர்வாகி திருமதி மும்தாஜைப் பார்க்கச் சொன்னார் சாமிவேலு. என்னை வைத்துக் கொண்டே மும்தாஜை தொலைபேசியில் அழைத்தார். “முத்தரசு என்பவரை உங்களை வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் நீண்ட கால நண்பர்கள். என்ன செய்வது? அவர் எப்போதும் சுப்ராவைத்தான் ஆதரித்தார். அது ஒன்றுதான் எங்களின் பிரச்சனை. மற்றபடி இப்போதுதான் அரசியலில் நானும் இல்லை, சுப்ராவும் இல்லையே” என நெருடல் மிகுந்த சோகத்துடன் கூறினார்.

பின்னர் பேசிக் கொண்டிருந்தபோது, சுப்ராவின் உடல் நலம் குறித்து மிகுந்த வேதனைப்பட்டார். எப்படி இருக்கிறார் என விசாரித்தார். “அவருக்கு ஏன் இப்படி ஆகிவிட்டது என நினைத்து பல முறை வேதனைப்பட்டிருக்கிறேன். நான் அவருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. ஏனோ, அரசியல் எங்களை இப்படிப் பிரித்து விட்டது. அவரை நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும் என முயற்சி எடுத்தேன். முடியவில்லை” என நா தழுதழுக்க அவர் கூறியபோது அவரின் கண்களில் இருந்தது கண்ணீர் வழிந்ததும், அதைத் துடைத்துக் கொண்டே அவர் பேசியதும் உண்மை!

என்ன செய்வது? கடவுள் சிலருக்கு சில மனமாற்றங்களை, சில காரணங்களால், காலம் கடந்துதான் ஏற்படுத்துகிறார்!

நிறைவாக…சாமிவேலு எவ்வாறு நினைவு கூறப்படுவார்?

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவரை அணுக்கமாகக் கவனித்து வந்த வகையில் அவர் மீதான அரசியல் விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துகள் நிறைய இருக்கலாம். ஆனால்,  அவரின் தனிமனித சுய முன்னேற்றம், போராட்ட குணம், அரசியலில் இறுதிவரை விட்டுக் கொடுக்காமல் களத்தில் நிற்கும்  அஞ்சா நெஞ்சம், நேரக்கட்டுப்பாடு என பல அம்சங்கள் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை.

சாமிவேலுவின் வாழ்க்கை என்பது ஒரு தனி மனித வாழ்க்கை அல்ல. இந்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியின் பிரதிபலிப்புதான் அவரின் வாழ்க்கை.

ஒருவன் எத்தனை ஏழ்மையும்  பின்னடைவும் கொண்ட சூழ்நிலையைக் கொண்டிருந்தாலும்  – போதிய கல்வியைப் பெறாத நிலைமை இருந்தாலும்  – விடா முயற்சியோடு கடுமையாக உழைத்தால் – போராடினால் தான் சார்ந்த துறையில் வெற்றியும் உச்சபட்ச அடைவும் சாத்தியம் – என்பதை அவர் கடந்த தலைமுறைக்கும்  எதிர்வரும் தலைமுறைகளுக்கும் நிரூபித்துச் சென்றிருக்கிறார்.

கடந்த காலங்களில் சாமிவேலு மீது எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் அரசியல் ரீதியாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால்,  தனிமனித  போராட்டக் குணம், கடும் உழைப்பு, நேரந்தவறாமை, அதிகாலை துயில் எழுதல், நாள்தோறும் தன்னை மேம்படுத்திக்கொள்வது, மாறி வரும் நவீன சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது போன்றவை அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள அவர் விட்டுச் சென்றிருக்கும் பாடங்களாகும்.

-இரா.முத்தரசன்