Home நாடு “15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற ஓரளவுக்கு எங்களுக்கு வாய்ப்பு” – அன்வார் இப்ராகிம்

“15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற ஓரளவுக்கு எங்களுக்கு வாய்ப்பு” – அன்வார் இப்ராகிம்

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைக்கத் தங்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளதாக பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக் வந்திருக்கும் அவர், அங்கு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை – இந்த முறை கவனமுடன் செயல்படுவோம்”

இதற்கிடையில், மலேசியா கினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தானே முன் நின்று கொள்கை அறிக்கை நகல் வரைவை உருவாக்கி வருவதாக அன்வார் கூறியிருக்கிறார். பக்கத்தானால் நிறைவேற்றக்கூடிய கொள்கைகளையும் செயலாக்க நடவடிகைகளை மட்டுமே தாங்கள் கொள்கை அறிக்கை கடப்பாடுகளாக வெளியிடப் போவதாக அன்வார் உறுதி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதிகமான உறுதி மொழிகளை தந்துவிட்டு பின்னர் அதை நிறைவேற்ற முடியாமல் போவது நேர்மையான அரசியல் அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த முறை நாட்டின் சிறந்த கல்விமான்கள், அரசியல் சகாக்கள், கூட்டணி கட்சிகள் ஆகியவற்றின் கருத்துகளையும் ஒருங்கிணைத்து அந்த கொள்கை அறிக்கையில் இணைத்து வருவதாக அவர் கூறியிருக்கிறார்.

தான் சிறையில் இருந்தபோது, சேமித்து வைத்த குறிப்புகளையும் இந்த முறை கொள்கை அறிக்கையில் பொருத்தமான முறையில் சேர்த்துக் கொள்ளப் போவதாக அவர் மேலும் மலேசிய கினி நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

‘பக்கத்தான் கூட்டணியில் பலவீனங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறேன்.’ ஆனால், இறுதியில் நாட்டைக் காப்பாற்ற எங்களின் கூட்டணி கடப்பாடு கொண்டிருக்கிறது. சிறந்த அரசு நிர்வாகத்தை நாங்கள் வழங்குவோம் என்றும் அவர் உறுதி கூறினார்.

2018 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெளியிட்ட பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை அந்த கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களுள் ஒன்றாக அமைந்தது. அப்போது துன் மகாதீர் பிரதமர் வேட்பாளராக அந்தக் கூட்டணிக்குத் தலைமை வகித்தார். அன்வார் இப்ராஹிமோ சிறையில் இருந்தார்.

பக்கத்தானின் பொதுத் தேர்தல் அறிக்கை அன்று வெற்றியைத் தேடித் தரும் காரணிகளில் ஒன்றாக அமைந்தாலும் பிற்காலத்தில் அதுவே அந்த கூட்டணியின் தோல்விகளுக்கான காரணங்களுள் ஒன்றாக அமைந்தது.

138 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின்படி பக்கத்தான் அரசாங்கம் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதால்தான் அந்த கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்த முறை அத்தகைய தவறை செய்யமாட்டோம் என உறுதி கூறுகிறார் பக்கத்தான் ஹராப்பானின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.