மலாக்கா : ஒரு காலத்தில் மலாக்காவில் சக்தி வாய்ந்த முதலமைச்சராக உலா வந்தவர் டான்ஸ்ரீ ரஹிம் தம்பி சிக் (படம்). பின்னர் 1994-இல் ஒரு பாலியல் வழக்கினால், பதவியைத் துறக்க நேர்ந்தது.
ஆதாரம் இல்லாததால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இருப்பினும், அப்போதைய கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின் லிம் குவான் எங், ரஹிம் தம்பி சிக் மீதான பாலியல் வழக்கு பற்றிய கட்டுரையை வெளியிட்டதற்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
72 வயதான ரஹீம், 1982 முதல் 1994 வரை மலாக்காவின் முதலமைச்சராக இருந்தார். அவர் 2018 இல் அம்னோவை விட்டு வெளியேறி பெர்சத்துவில் இணைந்தார், பின்னர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் மொகிதின் யாசின் தலைமையில் இருந்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ 50 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மேல் வெல்ல வாய்ப்பில்லை எனவும் ரஹிம் கருத்துரைத்தார். கிராமப்புற அம்னோவினரும், மலாய்க்காரர்களும் அம்னோ மீது வெறுப்பு கொண்டிருப்பதாலும், அம்னோ தலைவர் மீதான ஊழல் வழக்கினாலும் அம்னோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.