கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புதிய அமைச்சரவை 2 துணைப் பிரதமர்களுடன் இன்று பதவியேற்றுக் கொண்டது.
தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, சரவாக் ஜிபிஎஸ் கூட்டணி சார்பில் ஃபாடில்லா யூசோப் ஆகிய இருவரும் துணைப் பிரதமர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களைத் தவிர 25 அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் எனவும் அன்வார் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் புதிய அமைச்சரவை எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் – அதன் இலக்குகள் என்ன – என்பது போன்ற வழிமுறைகளைத் தான் விளக்கவிருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இதற்கிடையில் அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக் கொண்டனர். மாறாக துணையமைச்சர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
ஒரே ஓர் இந்திய அமைச்சர் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதால், துணையமைச்சர்களாக நியமனம் பெறப் போகும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற ஆர்வம் இந்திய சமூகத்தில் எழுந்திருக்கிறது.
ஜசெக, பிகேஆர் கட்சிகளில் இருந்து 10 இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றிருக்கின்றனர். இவர்களில் சிவகுமார் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து எஞ்சிய 9 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் துணையமைச்சர்களாகப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.