அங்காரா : துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்தும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளாலும் இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,800-ஐ கடந்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மீட்புப் பணிகள் சுணக்கமடைந்திருப்பதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்துள்ளன.
இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கும் கைக்குழந்தைகளையும், சிறுவர் சிறுமியர்களையும் மீட்புக் குழுவினர் மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்கும் காட்சிகள் மனதை உருக வைக்கின்றன.
பல கட்டடங்கள் சேதமுற்று சரிந்து விழுந்திருக்கின்றன. உலக நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றன. துருக்கியும் நேட்டோ நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் உதவி புரிய வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
துருக்கி நிலநிடுக்கத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மலேசியாவின் ஸ்மார்ட் என்னும் சிறப்பு மீட்புப் படையினர் துருக்கி சென்றுள்ளனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பாதிக்கப்பட்ட துருக்கிய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்வார் தெரிவித்துக் கொண்டார்.