Home Photo News டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன் : சட்ட அமைச்சர் பதவி வகித்த ஒரே இந்தியர் – 51வது வயதிலேயே...

டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன் : சட்ட அமைச்சர் பதவி வகித்த ஒரே இந்தியர் – 51வது வயதிலேயே இந்திய சமூகம் இழந்த சோகம்

689
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன்

(9 மே 1976-இல் மறைந்த மஇகாவின் முன்னாள் துணைத் தலைவர், சட்ட அமைச்சர், டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன் குறித்த நினைவு நாள் சிறப்புக் கட்டுரையில் அவரின் தலைமைத்துவ ஆற்றல், சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியராக 22 வயதில் பொறுப்பேற்றவர்
  • சிறந்த ஆற்றல் கொண்ட வழக்கறிஞர்
  • 1973 முதல் 1976 வரை – மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்
  • தலைநகர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வட்டாரத்தில் ஆதி.நாகப்பன் பெயரில் சாலை.

1972ஆம் ஆண்டு வரை ம.இ.கா. சார்பில் இரண்டு அமைச்சர்கள்  அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.  துன் சம்பந்தனும் வெ. மாணிக்கவாசகமும்தான் அவர்கள்.

1973ஆம் ஆண்டில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்ட பின்னர், மாணிக்கவாசகம் மட்டுமே முழு அமைச்சராக  நீடித்தார்.

#TamilSchoolmychoice

1974 முதல் பிரதமர் துறையில் துணை அமைச்சராக, செனட்டராக இருந்த ஆதி. நாகப்பன் துன் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் செயலாற்றி வந்தார். துன் ரசாக் மறைவுக்குப் பின்னர் பிரதமராகப் பதவியேற்ற துன் ஹூசேன் ஓன், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மஇகாவுக்கு மீண்டும் 2 அமைச்சர் பதவிகள் வழங்கினார். கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஆதி. நாகப்பன் சட்டத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்த அவர்,  சட்டத்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஒரே இந்தியராவார். அவருக்கு சட்டத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை முன்னிட்டும் மஇகாவுக்கு 2-வது அமைச்சுப் பொறுப்பு கிடைத்ததற்காகவும் ஒரு பிரமாண்டமான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைநகர் பெடரல் தங்கும் விடுதியில்  மே 9 ஆம் தேதி 1976ஆம் ஆண்டு அந்தப் பாராட்டு விழா நடைபெற்றது. ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகமும் சமூக இயக்கத் தலைவர்களும், மஇகா பிரமுகர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பாராட்டுரைகள், மாலை அணிவிப்புகள் எல்லாம் முடிந்து, உரையாற்றத் தொடங்கினார் ஆதி. நாகப்பன். விடுதலை குறித்தும் சிந்தனைப் புரட்சிக் குறித்தும் அவர்  பேசினார்.

அந்த சமயத்தில்தான்  தமிழ்ப்பள்ளிகள் வேண்டும் என்று கேட்பது நமது உரிமை. அதை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்ற கருத்தையும் ஆதி. நாகப்பன் முன்வைத்தார். அவர் நின்று கொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவரது தலை அவர் பேசிக் கொண்டிருந்த ஒலிபெருக்கி (மைக்) மீது லேசாக இடித்தது. தற்செயலான ஒரு சம்பவமாக கூட்டத்தில் இருந்தவர்கள் முதலில் நினைத்தனர்.

ஆனால்,  அடுத்த கணமே சரிந்து மேடையிலேயே விழுந்தார் ஆதி. நாகப்பன். கூட்டத்தினர் அந்தக் காட்சியைக் கண்டு உறைந்தனர்.  மாணிக்கவாசகத்தின் தம்பி டாக்டர் கணேசன் உடனடியாக மேடைக்குச் சென்று ஆதி. நாகப்பனின் நாடித் துடிப்பை பரிசோதித்தார். அப்போதே அவர் இறந்துவிட்டார் என்பதையும் டாக்டர் கணேசன் உணர்ந்தார்.

திடீர் மாரடைப்பால்  ஆதி. நாகப்பன் தனது 50-வது வயதிலேயே மரணமடைந்தார். ம.இ.கா.வின் மூத்த அரசியல்வாதிகள் பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் இன்றும் அந்த சம்பவத்தை சோகத்தோடு நினைவு கூர்கின்றனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் டத்தோ வி.எல்.காந்தன். டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் இளைய சகோதரர். சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் –  ஆட்சிக்குழு உறுப்பினர்.

வி.எல். காந்தன் அந்த சம்பவத்தை இன்றும் மறக்காமல்  நினைவில் கொண்டிருப்பதாக  தெரிவித்தார்.

ஆதி. நாகப்பனின்  திறமைகள் – சில சாதனைகள் குறித்தும் காந்தன் அன்னாரின் நினைவு நாளை முன்னிட்டு பகிர்ந்து கொண்டார்.

சிலம்பம் தற்காப்புக் கலைக்கு உயிரூட்டியவர்

டத்தோ வி.எல்.காந்தன்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்  மலேசியாவில் தற்காப்புக்கலைகள் தடை செய்யப்பட்டிருந்தன.  சுதந்திரத்திற்குப் பின்னர் சிலாட் என்ற மலாய் தற்காப்புக்கலை மீதான தடை நீக்கப்பட்டு மீண்டும் அந்த தற்காப்புக் கலையில் மலாய்க்காரர்கள் பயிற்சி பெறத் தொடங்கினர்.

அப்போது தற்காப்புக்கலை சட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணியில் ஆதி. நாகப்பன் ஈடுபட்டிருந்தார். அவரின் முயற்சியால் 1976 தற்காப்புக் கலை சட்டம் (Martial Arts Act 1976) நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.

“1975ஆம் ஆண்டு வாக்கில் என்று நினைக்கின்றேன் மகாகுரு ஆறுமுகம் என்பவர் என்னையும் வீ. கோவிந்தராஜுவையும் சந்தித்து சிலம்பம் என்ற தமிழர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலைக்கு உயிரூட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதன்படி தற்காப்புக் கலை சட்டம் திருத்தம் செய்யப்பட்டபோது அதில் நமது பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பமும் சேர்த்துக் கொள்ளப்பட ஆதி.நாகப்பன் பரிந்துரைத்தார். பிற்காலத்தில் ‘மலேசியா சிலம்பம் கழகம்’ என்ற அமைப்பு எனது முயற்சியால் தோற்றுவிக்கப்படுவதற்கு ஆதி. நாகப்பன் செய்த இந்த மாற்றமே காரணமாக அமைந்தது” என நினைவு கூர்கிறார் காந்தன்.

முஸ்லீம் அல்லாதவர்களுக்கான திருமண – விவகாரத்து சட்டத்தை உருவாக்கியவர்

நீண்ட காலமாக   பல ஆய்வுகள் செய்து ஆதி. நாகப்பன் தலைமையிலான குழு 1976-இல் உருவாக்கிய சட்டம் – முஸ்லிம் அல்லாதவர்களுக்கான திருமண – விவாகரத்து சட்டமாகும். இன்றுவரையில் இந்த சட்டத்தின் அடிப்படையில்தான்  முஸ்லிம் அல்லாதவர்களுக்கான திருமணம் – விவாகரத்து தொடர்பிலான சட்ட அம்சங்கள் நீதிமன்றங்களால் கையாளப்படுகின்றன. சட்ட அமைச்சராக ஆதி.நாகப்பனே இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

சிறந்த அறிவாற்றல் கொண்டவராக – வழக்கறிஞர் தொழிலில்  சிறந்து விளங்கிய ஆதி.நாகப்பன் – அதிக வருமானம் தரக்கூடிய தனது சொந்த வழக்கறிஞர் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

எனினும், சமுதாயத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அவர், ம.இ.கா.வின் வழி அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.

துன் சம்பந்தனின் தலைமைத்துவ மாற்றத்திற்கு வித்திட்டவர்

1970ஆம் ஆண்டுகளில் ம.இ.கா.வில் ஆட்சி மாற்றம் வேண்டும் என முழங்கி, துன் சம்பந்தனுக்கு எதிராகப் போராடியவர் ஆதி. நாகப்பன்.

1972ஆம் ஆண்டு கட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்,  சம்பந்தனை எதிர்த்து மாணிக்கவாசகம் போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிடாவிட்டால் நானே சம்பந்தனை எதிர்த்துப் போட்டியிடுவேன் என மாணிக்காவுக்கு நெருக்குதலைத் தந்தார் ஆதி. நாகப்பன்.

அவருக்கு அப்போது உறுதுணையாக இருந்தவர் பிற்காலத்தில் மஇகாவின் தேசியத் தலைவராக வளர்ந்த (துன்) சாமிவேலு. ம.இ.கா.வில் தலைமைத்துவ மாற்றம் என ஆதி. நாகப்பன் தொடங்கிய போராட்டத்தால்தான், அப்போதையப் பிரதமர் துன் ரசாக் தலையிட்டு  சம்பந்தன்– மாணிக்கவாசகம் இடையில் போட்டியின்றி சுமுகமான தலைமைத்துவ மாற்றத்திற்கு வழிவகுத்தார்.

1973 ஜூன் மாதத்தில் மாணிக்கா தேசியத் தலைவரானார். ஆதி. நாகப்பன் துணைத் தலைவரானார். செனட்டரான ஆதி.நாகப்பன் 1974 பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. துன் ரசாக் அமைச்சரவையில் பிரதமர் துறை துணையமைச்சராகப் பணியாற்றி வந்தார். 1976 மார்ச் மாதத்தில் சட்டத்துறை அமைச்சரான ஆதி. நாகப்பன் அடுத்த இரண்டு மாதங்களிலேயே மரணமடைந்தது, மஇகாவுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பும் சோகமுமாகும்.

அடுத்த  சுமார் 35 ஆண்டுகளுக்கு  ஆதி.நாகப்பன் மரணத்தால் மஇகா இழந்த 2-வது அமைச்சர் பதவி அந்தக் கட்சிக்கு மீண்டும் வழங்கப்படவே இல்லை.

ஆதி.நாகப்பனின் பன்முக ஆற்றல்

ஆதி.நாகப்பன்-ஜானகி ஆதி.நாகப்பன்

ஆங்கிலம், தமிழ், மலாய் என மொழியாற்றல் கொண்டிருந்தவர் ஆதி.நாகப்பன். 9-வது வயதில் தமிழ் நாட்டிலிருந்து பினாங்கு வந்து இங்கேயே கல்வி கற்றவர். தனது 22-வது வயதில் தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியரானார். இலக்கியவாதியாகவும் திகழ்ந்த அவர் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

5 ஆண்டுகள் தமிழ் நேசன் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னரே சட்டம் படிக்க லண்டன் சென்றார். கிரேஸ் இன் (Grays Inn) என்னும் சட்டக் கல்லூரியின் வழி பாரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பினார்.

தனது சட்ட அறிவைக் கொண்டு நாட்டிற்கு பல வகையிலும் பங்களிப்புகள் செய்தார். அரச விசாரணை வாரியங்களுக்கு தலைமை வகித்தார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டார். சபா மலேசியாவுக்குள் அனுமதிக்கப்பட, அமைக்கப்பட்ட ஐ.நா.மன்றத்தின் கோப்போல்ட் விசாரணைக் குழுவின் உறுப்பினராக மலேசியாவின் சார்பில் செயலாற்றினார்.

ஆதி.நாகப்பன் நினைவாக தலைநகர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வட்டாரத்தில் உள்ள ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது.

தன் திருமணத்திலும் புரட்சி செய்தவர் ஆதி.நாகப்பன். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அவர், அப்போதே ஜானகி என்பவரைக் கலப்புத் திருமணம் புரிந்தார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய ஜானகி நாகப்பன் பிற்காலத்தில் மஇகா மகளிர் தலைவியாகவும், செனட்டராகவும் பதவிகள் வகித்தார்.

2014-ஆம் ஆண்டில் தன் கணவர் மறைந்த அதே மே 9-ஆம் தேதி காலமானார் ஜானகி ஆதி நாகப்பன்.

– இரா.முத்தரசன்