Home இந்தியா அ.தி.மு.க. சார்பில் 1 ஆம் தேதி மே தின விழா பொதுக்கூட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் 1 ஆம் தேதி மே தின விழா பொதுக்கூட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு

542
0
SHARE
Ad

ammaசென்னை, ஏப்ரல் 25-  முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் ‘மே’ தினம். ஓய்வு என்பதும், மகிழ்வு என்பதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற நாள் ‘மே’.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, உழைக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்படைய வேண்டும், உலக முன்னேற்றத்திற்காக தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும் நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள் மே தினமாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

மே தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மே தினத்தைக் கொண்டாடும் வகையில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் 1.5.2013 (புதன்கிழமை) அன்று ‘மே’ தின விழா பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு பேசுபவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெறும் ‘மே’ தின விழா பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்களும், நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள ‘மே தின’ விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை மாவட்டக் கழக செயலாளர்களுடனும், நிர்வாகிகளுடனும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.