Home நாடு மகாதீர்-மொகிதின் இணைப்பு – மாற்றம் வருமா?

மகாதீர்-மொகிதின் இணைப்பு – மாற்றம் வருமா?

408
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலாய் சமூகத்தை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இருவரும் சந்தித்துள்ளனர் என மகாதீரின் நெருக்கமான ஆதரவாளர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.

மலாய் சமூகத்தை மேம்படுத்துவதற்கான போராட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காகவே இருவருக்குமிடையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்  நீடித்த சந்திப்பு நிகழ்ந்ததாக மலாய் பிரகடன செயலகத் தலைவருமான கைருடின் தெரிவித்தார்.

இரு தலைவர்களும் தங்களது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மலாய் பிரகடன இயக்கத்தை ஊக்குவிக்க ஒப்புக்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“உண்மையில், கட்சி சார்பற்ற மலாய் பிரகடன இயக்கம், அந்தந்த அரசியல் சித்தாந்தங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைக்கத் தயாராக இருக்கும் எந்தவொரு ஆர்வமுள்ள மலாய்க்காரர்களுக்கும் அதன் கதவுகளைத் திறக்கும்” என்றும் கைருடின் தெரிவித்திருந்தார்.

மலாய் பிரகடன இயக்கம் கட்சி அடிப்படையில் அல்ல, மாறாக மலாய்க்காரர்களின் போராட்டம் மற்றும் உணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் கைருடின் கூறினார்.

“கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ள மலாய்க்காரர்களின் உரிமைகளின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் மலாய் பிரச்சினைகளை விவாதித்து தீர்க்க முயல்கிறோம்,” என்று அவர் கூறினார்.

அரசியலமைப்பிற்கு முரணான முறையில் நாட்டில் உள்ள மற்ற சமூகங்களின் உரிமைகளை மீறுவதும் அனுமதிக்கப் படாது என்றும் கைருடின் தெரிவித்தார்.

எனினும் நீண்ட காலமாக அமைச்சர், துணைப் பிரதமர், பிரதமர் பதவிகளை வகித்த இருவரும் இப்போது புதிதாக மலாய் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சார யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

அன்வாரை வீழ்த்துவதற்காகவே இருவரும் இணைந்துள்ளனர் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.