Home கலை உலகம் ஆஸ்ட்ரோ ‘ஜீயும் நீயும்’ – தொடரின் கலைஞர்கள் குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ ‘ஜீயும் நீயும்’ – தொடரின் கலைஞர்கள் குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

343
0
SHARE
Ad

அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ஒளியேறி பரவலான பாராட்டுகளைப் பெற்ற தொடர் ‘ஜீயும் நீயும்’. ‘ஜீயும் நீயும்’ தொடரைக் காணத் தவறியவர்கள் ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்ட் தளத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழலாம்.  இந்தத் தொடரின் நடிகர்கள் –  குழுவினருடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நேர்காணல் :

எஸ். பாலச்சந்திரன், இயக்குநர்:

ஜீயும் நீயும் தொடரை இயக்குவதற்கான உங்களின் உத்வேகம் என்ன?

#TamilSchoolmychoice

நகைச்சுவையும் கற்பனையும் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்த வகையாகும். ‘ஒரு கலைஞனின் டைரி’ என்றத் தீவிரமான நாடகத் தொடரை இயக்கியப் பிறகு, இரசிகர்களுக்கு வேடிக்கையாக ஏதாவது படைப்பை வழங்க வேண்டும் என்று நான் எண்ணினேன். அது என்னை ஜீயும் நீயும் தொடரை உருவாக்க வழிவகுத்தது.

எஸ்.பாலசந்திரன்

இந்தத் தொடரின் உந்து சக்தி என் நண்பன் ஜீ. நாங்கள் 11 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் படைப்பில் பணிபுரிய வேண்டும் என்பது என் விருப்பம். நகைச்சுவை சார்ந்த கலைப்படைப்புகளில் தேர்ச்சிப் பெறுவது மிகவும் கடினம்.

ஆகையால், சவாலை ஏற்க முடிவு செய்தேன். ஒரு வகையான முழுக் குடும்பமும் இரசிக்கக் கூடிய ஒரு நாடகத் தொடரை நான் உருவாக்க விரும்பினேன். தொடரைப் பார்க்கும் இரசிகர்களுக்கு மகிழ்ச்சி, சிரிப்பு, மற்றும் உற்சாகத்தைத் தர வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. இத்தொடரின் நகைச்சுவைச் சிலேடைகள் மற்றும் சொற்களஞ்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் அனைவரும் தொடர்புப்படுத்தக்கூடியப் பலவிதமான அன்பானக் கதாப்பாத்திரங்களை நான் உருவாக்கினேன். வாழ்க்கையின் அன்றாட அழுத்தங்களிலிருந்து தேவையான இடைவெளியை இந்த நிகழ்ச்சி வழங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஜீயும் நீயும் தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகள் யாவை?

பல சுவாரசியமான நினைவுகள் எனக்கு உள்ளன. அவற்றில் ஒன்று ‘கதிரேசன்’ எனும் கருப்பு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கும் இட்லி எனும் நாய்க்கும் இடையிலான சண்டை. இட்லியின் பாதுகாப்பில் நான் மிகவும் அக்கறை கொண்டிருந்தேன். அந்தக் காட்சியைப் படமாக்கும் போது நான் அதன் கயிற்றை இறுகப் பிடித்தேன். கதிரேசன் ஜீயின் காலின் அருகே இருந்தப் பையைக் கடித்தது வேடிக்கையாகவும் இருந்தது, அதே சமயம் பயமாகவும் இருந்தது. படப்பிடிப்பிற்கு ஒரு நாள் முன்பு, இரவில் பங்கோர் கடற்கரையில் நடிகர்கள் மற்றும் குழுவினர் ஓய்வெடுத்தப் போது ‘பயோலுமினென்சென்ஸ்’ எனும் இயற்கை நிகழ்வைக் கண்டது மற்றொருச் சுவாரசியமானத் தருணமாகும். ஒவ்வொரு காட்சியிலும் நடிகர்கள் சிறந்த நடிப்புத் திறமை வழங்கி நான் எழுதிய கதாப்பாத்திரங்களை உயிர்பித்தது சிறந்த நினைவகம் என்றுதான் கூறுவேன்- அது உண்மையிலேயே மாயாஜாலமாக இருந்தது.

ஜீ குட்டி, கவிதா & ஷேபி, நடிகர்கள்:

ஜீயும் நீயும் தொடரில் நீங்கள் நடித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்?

‌ஜீ குட்டி

ஜீ: உயரம் மற்றும் தோற்றம் காரணமாக நடிகராக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர்வதில் தடையையும் அன்றாட வாழ்வில் பல போராட்டங்களையும் எதிர்கொள்ளும் குள்ள மனிதர் ஜீயாக நான் நடித்தேன். ஒரு ஜீனியைக் கொண்ட மர்ம மோதிரத்தைக் கண்டபோது அவரது வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராதத் திருப்பம் ஏற்பட்டது.

அதிர்ஷ்டத்தின் தாக்கத்தால், அவர் அதன் எஜமானர் ஆனார். ஜீனியின் மாயாஜாலத்தால், அவரது தோற்றம் மாற்றம் அடைந்தது, அடைய முடியாது என்று நினைத்தக் கனவுகளை அடைய முடிந்தது. நிஜ வாழ்க்கையில் குள்ள மனிதராக நான் எதிர்கொண்டப் போராட்டங்களைப் பிரதிபலிப்பதால், தனிப்பட்ட அளவில் கதை என்னை ஆழமாக எதிரொலித்தது. ஜீயின் சவால்கள், விரக்திகள் மற்றும் அவரது தோற்றத்தின் அடிப்படையில் சமூகம் அவருக்கு விதித்திருந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுப்படுவதற்கான அவரது விருப்பத்தை என்னால் மனதளவில் தொடர்புப்படுத்த முடிந்தது.

கவிதா

கவிதா: தாருகாவின் சாபத்தால் வளையத்தில் சிக்கியப் பேதை நீனாவாக நடித்தேன். அப்பாவித்தனம், உண்மைத்தன்மை மற்றும் தன் எஜமானரான ஜீயிடம் அசைக்க முடியாத விசுவாசம் ஆகியவற்றை அவள் வெளிப்படுத்துகிறாள். அவள் தன் மாயாஜாலத் திறன்களைப் பயன்படுத்தி தன் எஜமானரின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் செய்கிறாள். உடல் தோற்றத்தை விட ஒருவரின் மனம் முக்கியமானது என்ற நம்பிக்கையை நீனா கொண்டதால் என்னை ஆழமாக எதிரொலிக்கிறாள்.

ஷேபி

ஷேபி: ஜீவா எனும் உயரமான மற்றும் அழகான ஜீயின் மற்றொரு உருவமாக நான் நடித்தேன். ஒரு ஜீனியைக் கொண்ட ஒரு மந்திர மோதிரத்தை ஜீ கண்டுப்பிடித்தார். நடிகராக வேண்டும் என்ற தனது ஆசை உட்பட தனது பிறக் கனவுகளைச் சிரமமின்றி நிறைவேற்ற ஜீனியின் உதவியுடன் கவர்ச்சியான ஜீவாவாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆரம்பத்தில், இந்தத் தன்னம்பிக்கையான ஆளுமையுடன் தொடர்பு கொள்வது சவாலாக இருந்தாலும், பின்பு ஜீவாவின் விருப்பமான மற்றும் கவர்ச்சியானத் தன்மையைச் சித்திரிக்கும் பாத்திரத்தை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன்.

ஜீயும் நீயும் தொடரில் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?

ஜீ: எனது 12 ஆண்டுகாலப் பயணத்தில், முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தது மிகவும் சிறப்பான மைல்கல்லாக இருந்தது. நான் எதிர்கொண்ட ஆரம்பச் சவால்களில் ஒன்று, நீண்ட நேர உரையாடல்களை மனப்பாடம் செய்வது. இருப்பினும், எனது வசனங்களை நம்பிக்கையுடன் சொல்ல எனக்கு உதவிய எனது இயக்குநர் பாலா அவர்களின் அனைத்து வழிகாட்டுதலுக்கும் நன்றி. உயரம், நாய்கள், கதாநாயகிகள் மற்றும் தண்ணீர் பற்றிய எனது பயத்தையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் பயமாக இருந்தாலும் இவ்வ​னுபவம் என்னை எனது சுகமான மண்டலத்திற்கு அப்பால் தள்ளியது. ஒரு நடிகராகவும் தனிநபராகவும் என்னை வளர அனுமதித்தது. மொத்தத்தில், பயணம் வேடிக்கையாகவும் சவாலாகவும் இருந்தது. இத்தகைய நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிந்தது உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். தொடர் முழுவதும் ஊக்குவித்ததற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதா: இந்தத் தொடரில் ஒரு ஜீனியாக நடித்தது உண்மையிலேயே எனக்கு ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. நான் இதுவரை நடித்தப் பாத்திரத்தைப் போலல்லாமல், இக்கதாப்பாத்திரம் விரைவில் எனக்கு மிகவும் பிடித்தக் கதாப்பாத்திரமாக மாறியது. மேலும் திரையில் அக்கதாப்பாத்திரத்தை உயிர்ப்பிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது நுழைவு மற்றும் வெளியேற்றத் தருணங்களில் விஎப்எக்சின் பயன்பாடு நடிப்புச் செயல்முறைக்கு மேலும் மெருகூட்டியது. சவாலாகவும் சுவாரசியமாகவும் இருந்த எனது நடிப்பை வழங்கும்போது மாயாஜாலக் கூறுகளை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஓர் இளவரசி மற்றும் ஒரு ஜீனி என இரு வகையான ஆடை அணிகலன்களை அணியும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் வேடிக்கையாக இருந்ததோடுக் கதாப்பாத்திரங்களின் உலகில் என்னை முழுமையாக மூழ்கடித்தது. மொத்தத்தில், இந்த முழுப் பயணமும் மறக்க முடியாத மற்றும் போற்றக்கூடிய ஒன்றாக இருந்தது.

ஷேபி: ஜீயின் உயரமானப் பதிப்பான ஜீவாவின் கதாப்பாத்திரத்தில் நடித்தது ஒரு தனித்துவமானச் சவாலை ஏற்படுத்தியது. ஏனெனில் அவருடையப் பழக்கவழக்கங்கள் மற்றும் பேசும் பாணியைப் பிரதிபலிக்க வேண்டிருந்தது. மற்றொரு நபரின் முழு ஆளுமையைப் பிரதிபலிக்கும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்புக்கு முன் நாங்கள் செய்த ஒத்திகைகள் ஜீவாவின் சாராம்சத்தை வெளிப்படுத்த உதவியது. தயாரிப்புச் செயல்முறை முழுவதும், ஜீயின் தனித்துவமான நடத்தைகள், பேச்சு முறைகள் மற்றும் நடத்தைகளை நான் உன்னிப்பாகக் கவனித்துப் பயிற்சி செய்தேன். ஒரு நடிகராக நான் இதுவரை நடித்திராதப் புதிய ஆளுமையை ஆராய இது என்னை ஊக்குவித்தது. ஜீவாவாக நடித்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் வெகுமதியாகவும் இருந்தது.