Home Photo News புக்கிட் செலாம்பாவ் : இறுதி நேரத்தில் திரும்பி வந்த சண்முகம் மீண்டும் வெற்றி பெறுவாரா?

புக்கிட் செலாம்பாவ் : இறுதி நேரத்தில் திரும்பி வந்த சண்முகம் மீண்டும் வெற்றி பெறுவாரா?

307
0
SHARE
Ad

(கெடா மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் பாஸ் கட்சி மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் கெடா சட்டமன்றத் தொகுதி புக்கிட் சிலம்பாவ். அனல் பறக்கும் பிரச்சாரங்களின் மையமாகத் திகழும் அந்தத் தொகுதியில் பிகேஆர்-பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிடும் சண்முகம் மீண்டும் வெல்வாரா? தொகுதி நிலவரம் என்ன? தனது கண்ணோட்டத்தை வழங்குகிறார் இரா.முத்தரசன்)

நடப்பு மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் வரவுக்குப் பின்னர் கெடா மாநிலத்தின் அரசியல் களமே முற்றாக மாறிவிட்டது. சர்ச்சைகளின் நாயகனாகி விட்டார் அவர். பினாங்கு, கெடா மாநிலத்திற்கு சொந்தம் என்பதில் தொடங்கி – இந்தியர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் – சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாக நீதின்றத்தில் குற்றச்சாட்டு – அரிய மண் அகழ்ந்தெடுத்தது தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை – என இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் மீண்டும் கெடா மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தலைமையேற்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் சனுசி.

மீண்டும் பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் கூட்டணியே கெடாவைக் கைப்பற்றும் என ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன. கடும் போட்டி கொடுத்து கெடாவை மீட்டெடுப்போம் என தேசிய முன்னணி- பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் இன்னொரு பக்கம் முழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது புக்கிட் சிலாம்பாவ். கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல்வேறு சுவாரசியங்களையும், திருப்பங்களையும் கொண்டது இந்தத் தொகுதி.

மஇகா தொடர்ந்து போட்டியிட்ட தொகுதி

#TamilSchoolmychoice

பாரம்பரியமாக மஇகா, தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வந்த தொகுதி புக்கிட் சிலாம்பாவ்.1995,1999, 2004 பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து 3 தவணைகளாக இந்தத் தொகுதியில் வெற்றார் கெடா மாநில மஇகா தலைவர் வி.சரவணன். ஆட்சிக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2008 பொதுத் தேர்தலில் சரவணனுக்கு பதிலாக மஇகாவின் சார்பில் கிருஷ்ணன் சுப்பிரமணியம் போட்டியிட்டார்.

2008 பொதுத் தேர்தலில் அன்வார் தலைமையில் அப்போது பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்கு ஆதரவாக வீசிய அரசியல் சுனாமியால் வீழ்ந்த மாநிலங்களில் ஒன்று கெடா. புக்கிட் சிலாம்பாவ் தொகுதியிலும் மஇகா தோல்வியடைந்தது.

சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற திருப்பம்

ஒரு திருப்பம் என்னவென்றால், இந்தத் தொகுதியில் 2008 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகம் எதிர்பாராதவிதமாக 2,362 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

ஆறுமுகம் எப்படி வெற்றி பெற்றார் என்பதும் சுவாரசிய சம்பவங்களைக் கொண்டது. முதலில் இங்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தவர் பிகேஆர் வேட்பாளர். ஆனால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட அவசரம் அவசரமாக இறுதி நேரத்தில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஆறுமுகம்.

இருமுனைப் போட்டியால் எல்லா எதிர்ப்பு வாக்குகளும் தேசிய முன்னணிக்கு எதிராக – சுயேட்சையான ஆறுமுகத்திற்கு ஆதரவாக விழுந்தன. அவரும் வெற்றி பெற்றார். பின்னர் பிகேஆர் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டு கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் ஆனார். அரச மலேசிய விமானப் படையில் இயந்திரம் பழுதுபார்ப்பவராகப் பணியாற்றியவர் ஆறுமுகம்.

அடுத்த சில மாதங்களில் பிப்ரவரி 2009-இல் புக்கிட் சிலாம்பாவ் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக ராஜினாமா செய்து மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஆறுமுகம். அதன் மூலம் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியையும் இழந்தார். தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன – 5 மில்லியன் ரிங்கிட்டுக்கு கட்சி மாறச் சொல்கிறார்கள் – என தன் பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார் ஆறுமுகம்.

அவரின் பதவி விலகலால் 2009 ஏப்ரலில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மீண்டும் பிகேஆர் கட்சி போட்டியிட்டது. கடந்த முறை சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றார் என்பதால் இந்த முறை 13 சுயேட்சை வேட்பாளர்கள் அந்த இடைத் தேர்தலில் இங்கு களமிறங்கினர்.

பிகேஆர் சார்பில் போட்டியிட்ட எஸ்.மணிக்குமார் மஇகாவின் எஸ்.கணேசனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அடுத்து 2013 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் வேட்பாளர் மாற்றப்பட்டு, அந்தக் கட்சியின் சார்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2018-இல் போட்டியிட்ட சண்முகம்

2018 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் நிர்வாகியான சண்முகம். வெற்றியும் பெற்றார். அந்தத் தேர்தலில் கெடா மாநிலத்தை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி கைப்பற்ற ஆட்சிக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் சண்முகம்.

2020-இல் நிகழ்ந்த ஷெராட்டன் நகர்வைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம் ஆட்சி மாற, சில மாநில அரசாங்கங்களில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. கெடா மந்திரி பெசாராக இருந்த முக்ரிஸ் மகாதீர் பதவி விலக பாஸ் கட்சியின் சார்பில் மந்திரி பெசார் ஆனார் முகமட் சனுசி முகமட் நூர்.

ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியை இழந்த சண்முகம் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார். மீண்டும் அவரே இந்தத் தேர்தலிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் கட்ட பிகேஆர் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இறுதி நேரத்தில் பிகேஆர் பின்னணி அரசியலில் என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. இறுதி நேரத்தில் மீண்டும் பிகேஆர் வேட்பாளராக களத்திற்குத் திரும்பினார் சண்முகம்.

சண்முகம் வேட்பாளரான காரணங்கள் –
புக்கிட் சிலாம்பாவ் தொகுதி நிலவரம்

புக்கிட் சிலம்பாவ் சட்டமன்றத் தொகுதிக்கு பிகேஆர் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் கெடா பிகேஆர் தகவல் தொடர்புக்குழுவின் துணைத் தலைவர் ஆர்.சுந்தரராஜூ. வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் முன்னதாக அவருக்குப் பதிலாக சண்முகத்தை வேட்பாளராக அறிவித்தார் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன். போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சுந்தரராஜூவும் கட்சியின் முடிவை கண்ணியத்துடனும் பெருமனதுடனும் ஏற்றுக் கொண்டார்.

சண்முகம் மீண்டும் கொண்டு வரப்பட்டதற்கு தொகுதியில் அவருக்கு இருந்த ஆதரவு – குறிப்பாக இந்திய வாக்காளர்களின் ஆதரவு – ஒரு காரணம் என்கிறார்கள். இந்திய வாக்காளர்களின் அதிருப்தியால் தொகுதியில் தோல்வி ஏற்பட்டு விடக்கூடாது என்ற பிகேஆர் தலைமைத்துவத்தின் அணுகுமுறைதான் மாற்றத்திற்கான காரணம். நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரி அப்துல், சண்முகத்திற்கு ஆதரவாகக் கொடுத்த நெருக்குதல் இன்னொரு காரணம் என்கிறார்கள்.

காரணங்கள் என்னவோ, இன்றைய நிலையில் களத்தில் நிற்கிறார் சண்முகம். 23 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் அவரை எதிர்த்து நிற்பது பெரிக்காத்தான் நேஷனல் – பாஸ் கட்சியின் உஸ்தாஸ் அசிசான் பின் ஹம்சா. 59 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்பதால் இதில் பெரும்பான்மை வாக்குகள் பாஸ் வேட்பாளருக்கே செல்லும் என எதிர்பார்க்கலாம். தேசிய முன்னணியும் – பக்காத்தான் ஹாரப்பானும் இணைந்து எத்தனை விழுக்காட்டு வாக்குகளை சண்முகத்திற்கு ஆதரவாகத் திருப்ப முடியும் என்பதை வைத்துத்தான் அவரின் வெற்றியும் நிர்ணயிக்கப்படும்.

சுயேட்சை வேட்பாளராக தினேஷ் முனியாண்டியும் இங்கு போட்டியிடுவதால் மும்முனைப் போட்டியாக உருவாகியுள்ளது புக்கிட் சிலம்பாவ் தொகுதி. எனினும் தினேஷ் சுயேட்சை வேட்பாளராக பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாக்காளர்கள் பெரும்பான்மையினர் சண்முகத்தைத்தான் ஆதரிப்பார்கள். கெடாவில் பாஸ் கட்சியின் கடந்த கால நடவடிக்கைகள் இந்திய சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மறுக்க முடியாது. குறிப்பாக தைப்பூச விடுமுறை.

சீன வாக்காளர்களோ 17 விழுக்காட்டினர். மற்றவர்கள் 1 விழுக்காடு. சீன வாக்குகளில் பெரும்பான்மையும் சண்முகத்திற்கே கிடைக்கும். பெரிக்காத்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை.

கிளந்தான், திரெங்கானுவில் பாஸ் சின்னத்தில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்கள் கெடாவில் பெரிக்காத்தான் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள்.

79,518  வாக்காளர்களைக் கொண்டது புக்கிட் சிலம்பாவ். சீன, இந்திய வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றாலும் சண்முகம் வெற்றி பெற 10 முதல் 20 விழுக்காட்டு வரையிலான மலாய் வாக்காளர்களின் ஆதரவு தேவை.

அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யுமா அம்னோவும் பிகேஆரும்?

– இரா.முத்தரசன்