Home நாடு “அன்வார் ஒரு காலத்தில் இந்தியர்கள் நம்பிய அதே தலைவர்தானா?” – இராமசாமி கேள்வி

“அன்வார் ஒரு காலத்தில் இந்தியர்கள் நம்பிய அதே தலைவர்தானா?” – இராமசாமி கேள்வி

471
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : “ஒரு காலத்தில் இந்தியர்களும் மற்றவர்களும் நம்பிய அதே தலைவர்தானா அன்வார்?” என பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“சமீப காலங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த மூன்று சம்பவங்கள், மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கான ஒற்றுமை அரசாங்கம் அல்ல இது, மலாய்க்காரர்களுக்கான அரசாங்கம் கூட இது இல்லை என்பதையே உணர்த்துகிறது. தேசியக் கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் மலாய்க்காரர்கள் PH-BN கூட்டணியை பெருமளவில் நிராகரித்திருக்கிறனர். பிரதமர் அன்வார் இப்ராஹிம் இஸ்லாமிய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது பொதுவாகவே மலாய்க்காரர்கள் அல்லாத மக்களையும் குறிப்பாக இந்திய சமூகத்தை அவமதிப்பதாகவே அமைந்துள்ளது” என்றும் இராமசாமி தெரிவித்தார்.

“முதலாவதாக, சிலாங்கூரில் பிகேஆர் சார்பில் மீண்டும் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி அறிக்கையை வெளியிட்ட சம்பவம் – சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் – குறிப்பாக சிலாங்கூரில் – இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை  குறைவதற்கு காரணமாக இருந்தது. இரண்டாவதாக, மெட்ரிகுலேஷன் திட்டத்தில் நுழைவதற்கான ஒதுக்கீட்டு முறையைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அன்வார் ஓர் இந்திய மாணவியிடம் முரட்டுத்தனமாகப் பதிலளித்தது பொதுவாக இந்தியர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அன்வார், அறிவுத்திறன் குறிப்பாக கல்வி விஷயங்களில் இந்திய சமூகத்தின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் பதில் அளிப்பார் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அந்த மாணவியின் கேள்வி மலாய்க்காரர்களை பயமுறுத்தும் என்று கூறுவது ஒரு தேசியத் தலைவரான அவருக்குத் தகுதியில்லாத கூற்றாகும்.”

#TamilSchoolmychoice

“மூன்றாவது சம்பவம் மிக சமீபத்தில் நடந்தது. கிள்ளானில் உள்ள ஒரு மசூதியில் இந்து இளைஞரை இஸ்லாத்திற்கு மாற்றியதை அன்வார் உண்மையில் நிகழ்த்தினார் என்பது கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. அன்வாருக்கு முன் வேறு எந்தப் பிரதமர்களும் இதைச் செய்ததில்லை. அன்வார் ஒரு பக்தியுள்ள முஸ்லீமாக இருக்கலாம் ஆனால் இந்து இளைஞரை மதம் மாற்ற வேண்டிய அவசியம் ஏன்? அன்வாருக்கு தேவைப்படும் அளவுக்கு இந்த மதமாற்றத்தின் சிறப்பு என்ன? இஸ்லாம் தவிர மற்ற மதங்கள் இஸ்லாத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியை அன்வார் சொல்ல வருகிறாரா?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார் இராமசாமி.”

“நாட்டில் உள்ள பன்முக மதங்கள் மற்றும் பன்முக கலாச்சாரத்திலிருந்து வெளியேறும் வழி மதமாற்றம்தானா? சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல்களில் அன்வார்  செல்வாக்கை இழந்தது சந்தேகத்திற்கு இடமில்லாததே. இஸ்லாமிய அரசியல் இங்கு வலுவடைந்திருக்கிறது என்பதை அவர் உணரலாம். ஆனால் தற்போதைய நிலையைத் தக்க வைத்துக் கொள்வதால், இஸ்லாமிய அரசியலின் பழமைவாத சக்திகளைக் கட்டுப்படுத்த முடியாது. தேசிய கூட்டணி மற்றும் தொடர்புடைய அமைப்புகளில் பொதிந்து கிடக்கும் இஸ்லாத்தின் அரசியல் சக்தியை குறைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பதே மாற்று வழியாகும். வலதுசாரிகளின் அச்சுறுத்தும் சக்திகளைத் திசை திருப்ப அன்வார் வலதுபுறம் நகர்த்துவதற்கான தர்க்கரீதியான நடவடிக்கை என்று கருதப்படலாம். ஆனால் அத்தகைய நடவடிக்கை பொருளாதார ரீதியிலான கொள்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டும். மாறாக கலாச்சார அளவில் அல்ல” எனவும் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இராமசாமி கருத்து தெரிவித்தார்.

தனது கருத்துப் பதிவில் இராமசாமி மேலும் பின்வருமாறு தெரிவித்தார்:

“இருப்பினும், அன்வார் ஓர் இந்து இளைஞரை மதமாற்றம் செய்வதன் மூலம் அதீத வடிவத்தை ஏற்று முஸ்லிம் அல்லாதவர்களையும் முஸ்லிம்களையும் குழப்பியுள்ளார்.
மதமாற்றம் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய சமூகத்தின் உணர்வுகளையும் தன்மானத்தையும் புண்படுத்துமா என்பதை அன்வார் உணர்ந்தாரோ இல்லையோ தெரியவில்லை. மற்ற மத அதிகாரிகள் மத மாற்ற சடங்கை செய்ய முடியாதா என்ன?”

“என்ன சொன்னாலும், மதமாற்றம் மலேசியாவில் உள்ள இந்திய அல்லது இந்து சமூகத்திற்கு அவமானம் மற்றும் கேவலம் என்று பொருள் கொள்ளலாம். அன்வார் வெளிப்படையாக இந்துக்களை அவமதிக்கும் போது இந்திய சமூகம் எதிர்காலத்தில் அவருக்கு ஆதரவாக எப்படி வருவார்கள்?”

“இந்துக்கள், அவர்களின் மதம், அவர்களின் கலாச்சாரம் மற்றும் நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அவர்களுக்கு எந்த மதிப்பும் வழங்கப்படவில்லை. நாட்டின் நலனுக்காக பல தியாகம் செய்த இந்திய சமூகத்தின் மீது அன்வாருக்கு கொஞ்சமும் மரியாதை இல்லை அல்லது நன்றி இல்லை என்பதை உணர்த்த இந்த மூன்று சம்பவங்களுமே போதுமானவை.”

“2018, 2023 மற்றும் சமீபத்தில் முடிவடைந்த மாநிலத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி வழங்கிய இந்திய ஆதரவை அவர் முற்றிலும் மறந்துவிட்டார். முன்னதாக அன்வாரின் சீர்திருத்த இயக்கத்திற்கு இந்தியர்கள் பேராதரவு தந்ததை சொல்லத் தேவையில்லை. அதிகாரத்தில் உள்ள அன்வார் மற்றும் அதிகாரத்தில் இல்லாத அன்வார் என அவர் இரு வேறு நபர்களாகத் தெரிகிறார் என்பது தெளிவாகிறது. ஒரு வேளை நியாயப் படுத்துவதற்கான நடவடிக்கையில் அவர் ஒரு சந்தர்ப்பவாதியாக இருக்கலாம். இந்தியர்களும் மற்றவர்களும் நாட்டில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது.

மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை தற்போதைய விரக்தியிலிருந்தும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் அன்வார் வழிநடத்துவார் என்று நம்ப முடியுமா?