பாங்காக் : தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவாத்ராவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை மீது அரச மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க முடியும் – அந்த நடைமுறையை செயலாக்க மேலும் 2 மாதங்கள் ஆகலாம்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய தக்ஷின், கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்தார். அதன் மூலம் தண்டனையை தவிர்த்து வந்தார். அவரின் மகள் தலைமையிலான அரசியல் கட்சி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.
சிறைச்சாலைக்கு சென்ற உடனேயே தக்ஷின் அரச மன்னிப்பு கோரும் தன் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டில் இருந்து பாங்காக் வந்தடைந்த தக்ஷின் கைது செய்யப்பட்டார். இவருக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
உடனடியாக அவர் பாங்காக் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தக்ஷின் உடல் நலமும் சிறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையின் மருத்துவ அறையில் தக்ஷின் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது நாள் அவர் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்.