
கோலாலம்பூர் : பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற மதமாற்ற சடங்கிற்கு தலைமை தாங்கிய பிரதமர் அன்வார் இப்ராகிமின் செயல் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்ட டிக்டாக் காணொலி தொடர்பாக, இந்து சமய செயல்பாட்டாளர் அருண் துரைசாமி கடந்த திங்கட்கிழமை (21 ஆகஸ்ட்) காவல் துறைக்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டார்.
காலை 10 மணிக்கு புக்கிட் அமானில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அருண் துரைசாமியிடம், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை விசாரணை நீடித்தது என அவரது வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“ஒரு டிக்டோக் வீடியோவை வெளியிட்ட அருண் துரைசாமி அந்த வீடியோவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஒரு நாட்டின் பிரதமர் தனிப்பட்ட முறையில் சென்று ஒருவரை மதம் மாற்றுவது எப்படி சரியானது என்று கேள்வி எழுப்பினார். எந்த நேரத்திலும் அவர் சிறுவனின் மதம் மாறுவதற்கான உரிமையை கேள்வி கேட்கவில்லை. பிரதமரால் அதை எப்படிச் செய்ய முடியும் என்பதுதான் பிரச்சினை” என்றார் ராஜேஷ்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 504, மற்றும் தகவல் தொடர்பு பல்ஊடக சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் அருண் விசாரிக்கப்படுகிறார் என்றும் வழக்கறிஞர் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504, “எந்தவொரு நபரையும் வேண்டுமென்றே அவமதித்து, அதன்மூலம் ஆத்திரமூட்டலை ஏற்படுத்துவதை – அத்தகைய ஆத்திரமூட்டல் மூலம் ஒருவர் பொது அமைதியைக் குலைப்பதை” குற்றமாக்குகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஓர் அறிக்கையில், புக்கிட் அமான் சிஐடி இயக்குனர் முகமட் ஷுஹைலி முகமட் ஜெயின், அருண் விசாரணைக்கு அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
விசாரணையில் தலையிடவோ அல்லது வழக்கின் ஆரூடங்களை வெளியிடவோ அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என முகமட் ஷுஹைலி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
பிரதமர் செய்தது தவறு என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும், வேறு சில தரப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, அனைத்துலக மனித உரிமை அறவாரியத்தின் தலைவர் எஸ்.சஷிகுமார் ஆகியோரும் அன்வாரின் செயல் குறித்து தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
கிள்ளான் முஸ்லீம் நல இயக்கத்தின் தலைவர் ஹூஷிம் சாலே தனது வேண்டுகோளுக்கிணங்கவே அன்வார் அந்த மதமாற்று சடங்கிற்கு தலைமை வகித்தார் என தெரிவித்திருக்கிறார்.