புதுடில்லி : விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு உலக அளவில் செஸ் என்னும் சதுரங்க விளையாட்டில் சாதனைகள் படைத்து வருகிறார் பிரக்ஞானந்தா என்னும் தமிழ் இளைஞர்.
சமீபத்தில் நடைபெற்ற அனைத்துலக செஸ் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்தார். இதற்கான 80 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையையும் அவர் வென்றார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் என்னும் கௌரவத்தையும் அவர் செஸ் விளையாட்டுத் துறையில் பெறுகிறார்.
நடப்பு உலக வெற்றியாளரான மேக்னஸ் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். எனினும் இந்தியா முழுவதும் அவரின் சாதனைகளைக் கொண்டாடி வருகின்றனர். அவரையும் அவரின் பெற்றோர்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்துப் பாரட்டினார். 30 இலட்சம் ரூபாய் சன்மானமும் அளித்து கௌரவித்தார்.
அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரை நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) புதுடில்லியில் உள்ள தன் இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே சமூக ஊடகங்களின் வழி பிரக்ஞானந்தாவுக்கு மோடி பாராட்டுகள் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா 23 ஆயிரம் டாலர் மதிப்புடைய புத்தம் புதிய மின்சாரக் கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோர்கள் ரமேஷ்பாபு – நாகலட்சுமி தம்பதியருக்கு பரிசளித்துள்ளார்.