Home நாடு அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றம் – இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவார்களா? மாற்றப்படுவார்களா?

அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றம் – இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவார்களா? மாற்றப்படுவார்களா?

313
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மலேசிய அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பு – விரைவில் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவிக்கப் போகும் அமைச்சரவை மாற்றம்.

அந்த மாற்றம் குறித்து இன்னும் தான் முடிவு செய்யவில்லை என அன்வார் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில், அமைச்சரவை மாற்றம் பற்றி இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என கூறியிருக்கிறார்.

எனினும் அக்டோபர் மாதத்தில்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவு திட்டத்திற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக நிகழும் என ஆருடங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அமைச்சர்கள் யார்?

#TamilSchoolmychoice

நடப்பு அமைச்சரவையில் இந்திய சமூகம் சார்பில் சிவகுமார் (படம்) மட்டுமே முழு அமைச்சராக இடம் பெற்றிருக்கிறார். இவர் ஜசெக கட்சியை பிரதிநிதிக்கிறார்.

ஜசெக கட்சியை பிரதிநிதிக்கும் மற்றொரு இந்திய துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங்.

பிகேஆர் கட்சி சார்பில் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி துணை அமைச்சராக இடம்பெற்றிருக்கிறார். மஇகாவைவிட அதிகமான இந்திய சமூகத்தினரை உறுப்பினர்களாக கொண்டிருக்கிறோம் என பி கே ஆர் கட்சித் தலைவர்கள் அடிக்கடி கூறுவது உண்டு.

ஆனால் இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவம் என்று பார்த்தால் ஒரே ஒரு  இந்திய துணை அமைச்சரை மட்டுமே பி கே ஆர் கட்சி கொண்டிருக்கிறது.

சமீப காலமாக இந்திய சமூகத்தில் அன்வார் அரசாங்கம் மீதான குறை கூறல்களும் அதிகரித்து வருகின்றன. இந்திய சமூகத்திற்கு அன்வார் அரசாங்கம் ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையையும் இந்திய சமூகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது.

இதன் காரணமாக, இந்திய சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் அமைச்சரவை மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

மஇகா அமைச்சரவையில் இடம் பெறுமா?

இந்தியர்களை பிரதிநிதிக்கும் முக்கிய கட்சியாக இருக்கும் மஇகா சார்பில் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. மஇகாவின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டத்தோஸ்ரீ எம். சரவணன் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு துணை அமைச்சர் மஇகா கட்சியின் சார்பில் நியமிக்கப்படலாம்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு யாரும் இல்லாததால் செனட்டர்களாக இருப்பவர்களில் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படலாம்.

அண்மையில் நடந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில்  மஇகா போட்டியிடாததால் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு  இந்திய வாக்குகளை பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எல்லா கட்சிகளிலும் இந்தியர்கள் இருந்தாலும் மஇகாவில் இருக்கும் அதன் கட்டமைப்பும், மஇகா கிளை, தொகுதிகளின் செயல்பாடுகளும், பொதுத் தேர்தல் சமயங்களில் வேட்பாளர்களுக்கு மிகவும் பயன்படும். எனவே இந்திய சமூகத்தை திருப்திப்படுத்த மஇகாவையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள அன்வார் முன் வரலாம்.

சிவகுமார் அமைச்சராக நீடிப்பாரா?

ஜசெக கட்சி சார்பில் சிவகுமார் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பாரா? அல்லது அவருக்கு பதிலாக இன்னொரு இந்திய அமைச்சர் ஜசெக சார்பில் நியமிக்கப்படுவாரா? என்ற விவாதங்களும் எழுந்திருக்கின்றன. சிவகுமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக கணபதி ராவ் அல்லது குலசேகரன் ஜசெக சார்பில் நியமிக்கப்படலாம்.

பி கே ஆர் கட்சி சார்பில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன், செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் பி கே ஆர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.