கோலாலம்பூர், ஏப்ரல் 25 – வேட்புமனு தாக்கல் அன்று சுல்கிப்ளிக்கு முத்தம் கொடுத்து, இந்திய மக்கள் அனைவரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான ம.இ.காவைச் சேர்ந்த அந்த இந்தியரின் பெயர் என்.தேவேந்திரன் என்று தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அனைத்து இணையதளங்களிலும் சுல்கிப்ளிக்கு முத்தம் கொடுப்பதைப் போன்ற அவரது புகைப்படம் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது செயல் குறித்து இந்திய மக்கள் கொதித்து எழுந்ததுடன், அவருக்கு எதிராக தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வந்தனர்.
ஆனால் அது பற்றியெல்லாம் தான் கவலைப் படப்போவதில்லை என்று தேவேந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தேவேந்திரன் கூறுகையில், “பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை எனக்கு இருக்கிறது. சமூகத்திற்கு அது பிடிக்காமல் போகலாம் அதற்காக அவர்கள் என்னை விமர்சனம் செய்யலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. சுல்கிப்ளியை நாடாளுமன்ற வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த போது எனக்கும் அவர் மீது கடுமையான கோபம் வந்தது. எனது ஆதரவாளர்கள் 100 பேருடன் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சென்றேன். ஆனால் சுல்கிப்ளி வெளியே வந்தவுடன் இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். அதனால் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கன்னத்தில் முத்தமிட்டது மிதமிஞ்சிய செயல் என்பதை ஒப்புக்கொண்ட தேவேந்திரன், தான் யாரிடமும் பணம் வாங்கியோ அல்லது யார் சொல்லையும் கேட்டோ அதை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இறுதியாக, இது தேர்தல் சமயம் என்பதால் மக்கள் தன்னை சில நாட்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றும், அதற்குப் பின் மறந்துவிடுவார்கள் என்றும் தேவேந்திரன் கூறியுள்ளார்.