Home கருத்தாய்வு இந்தியர்கள் சுல்கிப்ளியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று நஜிப் கூறுவது எதன் அடிப்படையில்?

இந்தியர்கள் சுல்கிப்ளியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று நஜிப் கூறுவது எதன் அடிப்படையில்?

898
0
SHARE
Ad

zulkifli-noordin-

ஏப்ரல் 23 – சுல்கிப்ளியை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று எதன் அடிப்படையில் பிரதமர் நஜிப் கூறுகிறார் என்பது தான் தற்போது இந்திய மக்கள் அனைவரிடமும் எழுந்துள்ள ஒரு கேள்வி.

சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்தலாமா? வேண்டாமா? என்று இந்திய மக்களிடம் கருத்துக் கணிப்பு ஏதும் நடத்தப்பட்டு, அதில் இந்திய மக்கள் அனைவரும் சுல்கிப்ளிக்கு சாதகமாக கருத்துத் தெரிவித்தனரா? அல்லது

#TamilSchoolmychoice

சுல்கிப்ளி தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவரை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்று இந்திய மக்கள் சார்பாக அரசியல் கட்சிகள் ஏதும் முன்வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனரா?

இவற்றில் எந்த விதமான ஆதாரங்களும் இன்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் சுல்கிப்ளியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல.

சுல்கிப்ளிக்கு நாடாளுமன்ற தொகுதி

இத்தனை நாட்களாக மறைந்து கிடந்த சுல்கிப்ளியின் உண்மை முகத்தை, அந்த ஒரு காணொளி தேர்தலின் சமயத்தில் வெளிவந்து காட்டிக்கொடுத்துவிட்டது. அதனால் தானே இந்த மன்னிப்பு நாடகமெல்லாம்?

அனைவரும் அறிந்த இனவாதியான சுல்கிப்ளி, தேர்தலில் மட்டும் போட்டியிடாவிட்டால் நிச்சயம் தானாக முன்வந்து இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கமாட்டார்.

பிரதமராகிய நஜிப்பும் இந்தியர்களிடம் வந்து சுல்கிப்ளிக்காக இப்படி சமரசம் பேசிக்கொண்டிருக்க மாட்டார்.

சுல்கிப்ளியின் பேச்சு அடங்கிய காணொளி வெளிவந்தபோது அதுபற்றி எந்த ஒரு கருத்தையும் வெளியிடாத நஜிப்,

சுல்கிப்ளியை தேசிய முன்னணி வேட்பாளராக அறிவித்தவுடன் கொதித்தெழுந்த இந்திய சமுதாயம் தொண்டை வலிக்க கூக்குரலிட்ட போது அவர்களின் பேச்சுக்கு செவிசாய்க்காத நஜிப்,

இப்போது தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரே ஒரு இந்தியர் கொடுத்த முத்தத்தை வைத்து, இது தான் சமயம் என்று ஒட்டுமொத்த இந்திய மக்களும் மன்னித்துவிட்டார்கள் என்று அதை எடுத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

ஷா ஆலம் தொகுதியில் ஆலயங்களும், பள்ளிகளும் இந்தியர்களுக்குத் தேவை என்று பொய்யாக கவலைப்படும் சுல்கிப்ளி போன்ற அரசியல்வாதிகளின் பேச்சை நம்புவதற்கு இந்தியர்கள் ஒன்றும் சிறு பிள்ளைகள் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

பல்லின மக்கள் வாழும் மலேசிய மண்ணில், இந்திய மக்களை மிகக் கேவலமான முறையில் பேசிய சுல்கிப்ளியின் கருத்து, இந்திய மக்களால் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ இயலாதது.

அதே நேரத்தில், அப்படிப்பட்ட ஒரு இனவாதிக்கு நாடாளுமன்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் செயல், இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதை ஷா ஆலம் தொகுதி மற்றும் பொதுத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

-பீனிக்ஸ்தாசன்