கோலாலம்பூர், ஏப்ரல் 23- அண்மையில் கோலாலம்பூர் சுல்தான் சமாட் கட்டத்திலுள்ள தகவல், தொலைத்தொடர்பு பண்பாட்டுத் துறை அலுவலகத்தில் ‘எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான இலவச காப்புறுதித் திட்ட விளக்க கூட்டம்’ துணை அமைச்சர் செனட்டர் டத்தோ மெக்லின் டி குருஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நாடெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அரசாங்கம் வழங்கும் இலவசக் காப்புறுதி திட்டத்தில் பதிந்துக் கொள்ளவும் விளக்கத்தை கேட்டறியவும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து துணையமைச்சர் டத்தோ மெக்லின் டி குருஸ் இலவச காப்புறுதித் திட்டத்தைப் பற்றி உரையாற்றினார்.
உள்நாட்டுக் கலைஞர்களின் படங்களை இப்போது தொலைக்காட்சி 2இல் அதிகமாக ஒலிப்பரப்பி வருகிறார்கள். அந்நாட்களில் புகழ்பெற்று விளங்கிய கலப்படம் நிகழ்ச்சியை மீண்டும் மின்னல் எப் எம்மில் கொண்டு வரவும் அதனை தொலைக்காட்சியில் கண்டுக்களிக்கும் வண்ணம் ஒளிப்பரப்பும் வாய்ப்பைப் பெற்றுத் தரவும் மிகவும் சிரமம் அடைந்ததாக மெக்லின் டி குருஸ் தெரிவித்தார்.
கலைஞர் இயக்கங்களைச் சேர்ந்த கரு.கார்த்திக், பழனிச்சாமி, வெ.தங்கமணி, அருள் ஆறுமுகம், ஸ்ரீசண்முகநாதன், சாரதிகிருஷ்ணன், மற்றும் எழுத்தாளர்கள் பூ.அருணாசலம் , மலாக்கா முத்து கிருஷ்ணன், முல்லைச் செல்வன், அம்பாங் சுப்ரா, அனுராதா, முருகையா என நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களும் கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.