Home நாடு மைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்

மைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்

1967
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய முன்னணியின் ஓர் அங்கமாக டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் செயல்பட்டு வந்த மைபிபிபி கட்சி இரண்டு அணிகளாகப் பிளவுபட்டிருக்கிறது.

நானே இன்னும் அதிகாரபூர்வத் தலைவர் எனக் கூறிக் கொண்ட கேவியஸ் புதிய உச்சமன்றக் குழுவொன்றை நியமித்ததோடு, தனக்கு எதிராக செயல்பட்டு வந்த முன்னாள் துணையமைச்சர்கள் மெக்லின் டிகுருஸ், லோகபால மோகன், மற்றும் சுப்பராயன் போன்ற தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தேசிய முன்னணியில் இருந்து விலகி மைபிபிபி இனி தனித்துச் செயல்படும் என்றும் கேவியஸ் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்ச்சைகள் முடியும் வரை கேவியஸ் மைபிபிபி தலைவராக நீடிப்பார் என சங்கப் பதிவிலாகா வெளியிட்ட கடிதம் ஒன்றையும் கேவியஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இன்று சீன அசெம்பிளி மண்டபத்தில் கேவியஸ் தரப்பின் பேராளர் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கேவியஸ் தலைவராக நீடிப்பது உறுதிப்படுத்தப்படுவதோடு, மெக்லின் டிகுருஸ், லோகா பாலமோகன் போன்ற தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் மறு உறுதிப்படுத்தப்படும்.

தேசிய முன்னணியில் இருந்து விலகும் முடிவையும் பேராளர்கள் ஆதரித்து முடிவெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்லின் டிகுருஸ் தலைமையில் புதிய தலைமைத்துவம்

மெக்லின் டிகுருஸ்

இதற்கிடையில், கேவியசை தாங்கள் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறியிருக்கும் மைபிபிபியின் உதவித் தலைவர் மெக்லின் டிகுருஸ் நேற்று சனிக்கிழமை (மே 26) புத்ரா உலக வாணிப மையத்தில் தங்கள் அணியின் பேராளர் பொதுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

சுமார் 1,250 பேராளர்கள் கலந்து கொண்ட இந்த பேராளர் கூட்டத்தில் தேசிய முன்னணியில் மைபிபிபி நீடிக்கும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் அறிவித்தார். மேலும் கடந்த வியாழக்கிழமை (மே 24)  சங்கப் பதிவிலாகா அதிகாரிகளைச் சந்தித்தபோது தங்கள் அணியின் பொதுக்கூட்டத்தை நடத்த அவர்கள் வாய்மொழியாக அனுமதித்தனர் என்றும் கூறினார்.

நேற்றைய மைபிபிபி பேராளர் கூட்டம் கேவியஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தி ஆதரவு அளித்ததோடு, மெக்லின் டிகுருசை புதிய தலைவராகவும், லோகா பாலமோகனை முதலாவது உதவித் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

இரு அணிகளில் எந்த அணி அதிகாரபூர்வ அணி என்பது குறித்து சங்கப் பதிவிலாகா இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது