Home நாடு அம்னோதான் இப்ராகிம் அலியை நிறுத்தியது – போட்டு உடைத்தார் மகாதீர்! ஒரே மலேசியா சித்தாந்தம் சிதைந்தது!

அம்னோதான் இப்ராகிம் அலியை நிறுத்தியது – போட்டு உடைத்தார் மகாதீர்! ஒரே மலேசியா சித்தாந்தம் சிதைந்தது!

533
0
SHARE
Ad

Mahathir-Featureகோலாலம்பூர், ஏப்ரல் 26 – அம்னோவும், பெர்க்காசாவும் ஒன்றுக்குள் ஒன்றுஎன்பது சுல்கிப்ளி நோர்டினை வேட்பாளராக நியமித்த போதே வெளி உலகிற்கு தெரியத் தொடங்கிவிட்டது.

#TamilSchoolmychoice

அதற்கு அடுத்த கட்டமாக இப்ராஹிம் அலி விவகாரத்தில், பாசீர் மாஸ் தொகுதியில் கடைசி நேரத்தில் தே.மு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வராமல் போனபோது அதில் அம்னோவின் தலையீடு இருந்தது என்பது வெட்டவெளிச்சமானது.

ஆனால் அதை எல்லாம் விட, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி இரவு என்.டி.வி 7  என்ற தொலைகாட்சி அலைவரிசைக்கு அளித்துள்ள நேர்காணலின் மூலம், இத்தனை நாட்களாக  அம்னோவும், பெர்க்காசாவும் இணைந்து செயல்பட்டு வந்தது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

மகாதீரின் நேர் காணல்

நேற்று இரவு என்.டி.வி 7 தொலைக் காட்சியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மகாதீர், பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியடைய வேண்டுமானால் பெர்க்காசா போன்ற இனம் சார்ந்த அமைப்புகளின் ஆதரவு நிச்சயம் வேண்டும், காரணம் அவர்கள் எங்களுக்காக செயல்படுகிறவர்கள்என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த அரசாங்கம் பலவீனமடையும் போது,மலாய் இனத்தின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. அதனால் தான் பெர்க்காசா போன்ற அமைப்புகள் மலாய் இனத்தை காக்கப் தொடர்ந்து போராடி வருகின்றன” என்றார்.

“பெர்க்காசாவை ஆதரிப்பதால் சீனர்களின் வாக்குகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது, அவர்கள் தொடக்கத்திலிருந்தே தங்களது மொழி, கலாச்சாரங்களைத் தாண்டி மலாய்காரர்கள் உட்பட உள்ளூர் வாசிகளுடன் ஒன்றாகக் கலக்க மறுக்கிறார்கள். ஆனால் மற்ற குடியேறிகளான அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தோனேசியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்” என்றும் மகாதீர் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

“அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறுபவர்கள் அந்நாட்டின் கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே அங்கு வாழ்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் சீனர்கள் மட்டும் இங்குள்ள மக்களுடன் ஒன்றுபட மறுக்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய மொழி, இனம், கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து செல்லட்டும்” என்று மகாதீர் மேலும் பட்டவர்த்தனமாக கூறியுள்ளார்.

“இதனால் சீனர்களின் வாக்கு கிடைக்காது. மற்றும் மலாய் இனம் அல்லாதவர்களால் தேசிய முன்னணிக்கு 20 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்கிற போது, மலாய் இனத்திற்காகப் பாடுபடும் பெர்க்காசா போன்ற அமைப்புகளையும் இழந்து விட்டால் தேசிய முன்னணி வேறு எங்கு போகும்? அதனால் தான் பெர்க்காசா வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

மகாதீரால் தோல்வியடைந்துள்ள நஜிப்பின் ஒரே மலேசியா திட்டம்

Najib-2---Sliderபிரதமர் நஜிப் என்னதான் ஒரே மலேசியா போன்ற திட்டங்களை அமல்படுத்தி, இனப்பாகுபாடு இன்றி ஆட்சி நடத்துவது போல் நாடகமாடினாலும், அடிப்படையில் தேசிய முன்னணி அரசாங்கம் இனவாத கொள்கைகளை தான் கடைபிடித்து வருகிறது என்பது மகாதீர் போன்ற அக்கட்சியின் முக்கிய புள்ளிகளின் வாயால் அவ்வபோது தானாகவே வெளிப்பட்டுவிடுகிறது.

அதிலும் மகாதீர் முன்னாள் பிரதமர் என்பதும் இன்றைக்கும் அம்னோவில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நஜிப்பைக் கவிழ்ப்பதற்கு மகாதீர் ஒருவரே போதும்

நஜிப்பைக் கவிழ்ப்பதற்கு நாட்டில் வேறு யாரும் தேவையில்லை. மகாதீர் ஒருவரே போதும் – அவர் அவ்வப்போது வெளியிடும் மாறுபட்ட கோணல் மாணலான கருத்துக்களே போதும்,  என்பதற்கு பல சான்றுகளைக் கூறலாம்.

ஏற்கனவே நஜிப் நாடாளுமன்றத்தை கலைக்க தாமதப்படுத்திய போது, தேர்தலில் மோசமாக தோல்வியுற்றால் நஜிப் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என எதிர்மறையான கருத்து வெளியிட்டு அம்னோவுக்குள் குழப்பத்தை விதைத்தவர் இதே மகாதீர்தான்.

பின்னர் ஒருமுறை நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சோரைப் பற்றி கடுமையாக விமர்சித்த மகாதீர், ரோஸ்மாவின் நடவடிக்கையால் நஜிப்பின் தலைமைத்துவ தோற்றத்தில் களங்கம் ஏற்படுகின்றது என்ற தொனியில் கருத்துரைத்தார்.

ஆனால், பின்னர் அவரே,நஜிப்பின் மனைவி ரோஸ்மாவின் சுயசரிதை வெளியீட்டின் போது கலந்து கொண்டு பேசிய போது, ரோஸ்மாவின் சுயசரிதையை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அடுத்துவரும் 100 அல்லது 200 வருடங்களுக்கு அது சரித்திரமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும்  செய்தியாளர்களிடம் கூறினார்.

அது உண்மையாகக் கூறியதோ அல்லது உளறிக் கொட்டியதோ அல்லது கிண்டலாகக் கூறியதோ – அதை மகாதீர் ஒருவரே அறிவார்.

இப்ராகிம் அலியோடு இணைந்து பிரச்சாரம்

Ibrahim Aliஇதற்கிடையில் நஜிப் மலேசியா முழுக்க சுற்றி வந்து ஒரே மலேசியா என முழங்கி, அனைவரும் மலேசியர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட வேண்டும் என பிரச்சாரம் செய்து வந்த போது, அதனை முறியடிக்கும் வண்ணம், திசை திருப்பும் வண்ணம், மகாதீரோ இனத் தீவிரவாதி இப்ராகிம் அலியோடு இணைந்து கொண்டு பெர்க்காசா கூட்டங்களில் கலந்து கொண்டார்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது பெர்க்காசா மற்றும் இப்ராகிம் அலி பற்றி இந்த தொலைக்காட்சி நேர்காணலின் போது  மகாதீர் வெளியிட்டிருக்கும் கருத்து இந்த பொதுத் தேர்தலில் முக்கிய இடம் வகிக்கப் போகின்றது என்பதோடு மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்களிக்கும் மனப்போக்கையும் திசை திருப்பப் போகிறது எனலாம்.

“மற்ற இனத்தவர்கள் எப்படி போனால் எங்களுக்கு என்ன?  அம்னோ-தேசிய முன்னணி வெற்றி பெற்றால் தான் மலாய் இனத்தை காப்பாற்ற முடியும்” என்பது போல் அமைந்துள்ளது மகாதீரின் கூற்று

.இதனால் மலாய் இனம் அல்லாதவர்களின் வாக்குகள் அனைத்தும் தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகாதீரின் கைப்பிடிக்குள் – அவர் வகுக்கும் வியூக சிந்தனைகளின் அடிப்படையில்தான் அம்னோவும் நஜிப்பும் இயங்கி வருகின்றார்கள் என்பதை அரசியல் ஆய்வாளர்களும், எதிர் கட்சித் தலைவர்களும் வாய்கிழிய கத்தி வந்தாலும் அப்போது அதனை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

ஆனால் இப்போதோ நிலைமை வேறு!

பெர்க்காசாவின் இரண்டு தலைவர்களை அம்னோ சார்பாக  பொதுத் தேர்தலில் நிறுத்தி விட்டு, ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதது போல், வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டியவர் வேண்டுமென்றே சதி செய்துவிட்டார் என ஒரு பக்கம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க நஜிப்பும் அம்னோவும் முயன்று வருகின்றார்கள்.

ஆனால் மகாதீரோ பொதுத் தேர்தலுக்கு 9 நாட்களே இருக்கும் நிலையில் பெர்க்காசா வேட்பாளர்களை நிறுத்தியது நாங்கள்தான் – அதாவது அம்னோதான் நிறுத்தியது என போட்டு உடைத்து விட்டார்.

அதற்கு காரணமும் கண்டுபிடித்துக் கூறுகின்றார். மலாய்க்காரர் அல்லாதவர்களை வெறுப்பேற்றும் வண்ணம் – அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட தங்களின் மனங்களை மாற்றிக் கொள்ளும் வண்ணம் விஷமத்தனமான – ஒரு பல இன நாட்டில் விஷத்தை விதைக்கும் – இனத் துவேஷத்தை வளர்க்கும் – கருத்துக்களை உதிர்த்திருக்கின்றார்.

இதனால், நஜிப்பின் மதிப்பும் மரியாதையும், தலைமைத்துவ தோற்றமும் மகாதீரின் திருவாய் மொழியால் ஒரேயடியாக சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது எனலாம்.

தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து தாக்கும் பூமராங்ஆயுதம் போல், ஒரு காலத்தில் தேசிய முன்னணியை காப்பாற்றிய மகாதீரின் பேச்சே – பல பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அதே மகாதீரின் பேச்சே – இந்த முறை அதே தேசிய முன்னணியைப் பொதுத் தேர்தலில் கவிழ்க்கவும் பயன்படப் போகிறது என்பதுதான் விதியின் விந்தையான விளையாட்டு!

–    பீனிக்ஸ்தாசன்