கோலாலம்பூர் : மலேசியாவைப் பொறுத்தவரை நாட்டில் வெளிவரும் 3 தமிழ் நாளிதழ்களும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை வலியுறுத்தியதில்லை. மூன்று தமிழ் நாளிதழ்களுக்கும் வெவ்வேறு அரசியல் பின்னணிகள் – கொள்கைகள்.
எனினும் கடந்த சில நாட்களாக 3 தமிழ் நாளிதழ்கள் மட்டுமின்றி தமிழ் இணைய ஊடகங்களும் ஒருமித்த குரலில் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பி வருகின்றன.
சுதந்திரம் கிடைத்த பின்னர் இத்தனை ஆண்டுகளில் தமிழ் பேசும் அமைச்சர் ஒருவர் இடம் பெறாத அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கிறது – அதற்குக் காரணம் அன்வார் இப்ராகிம்தான் – அவர்தான் அந்த சாதனையைப் புரிந்திருந்திருக்கிறார் என்றெல்லாம் தமிழ் நாளிதழ்களில் அவரைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர்.
பினாங்கிலும் தமிழரல்லாத துணை முதல்வர், மத்திய அரசாங்கத்திலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த அண்ணன் இப்போது முழு அமைச்சர் – அவரின் இளைய சகோதரர் முன்பு துணையமைச்சர் – மூத்த அண்ணனுக்கு விட்டுக் கொடுத்து சகோதரரான துணையமைச்சர் பதவி விலகல் – என ஜசெகவில் ஒரே குடும்பத்தைச் சுற்றி பதவிகள் பரிமாறப்பட்டிருப்பது கண்டனங்களுக்குள்ளாகியிருக்கின்றன. சமூக ஊடகங்கள் முழுக்க இந்தியர்களிடையே விவாதிக்கப்படும் தலைப்பு இப்போது அன்வாரின் அமைச்சரவை நியமனங்கள்தான்.
இந்திய சமுதாயம் முழுக்க எல்லா நிலைகளிலும் இந்த அமைச்சரவை மாற்றங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.