
பாங்கி: மலாய்க்காரர்கள் மட்டுமே பிரதமராக முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அந்தப் பதவி எப்போதுமே பெரும்பான்மை இனத்தவருடையது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
“அரசாங்கத்திலோ அல்லது எதிர்க்கட்சியிலோ, பிரதமர் வேட்பாளர் மலாய்க்காரர்தான்” என நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) பண்டார் பாரு பாங்கியில் உள்ள அல்-கௌதர் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்வார் தெரிவித்தார்.
“இதன் தொடர்பில் ஒரு தீவிரமான விவாதமும் எந்தவொரு திருத்தமும் தேவையில்லை,” என்றும் அவர் கூறினார்.
இன நல்லிணக்கத்தையோ அல்லது சர்ச்சையையோ ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளை முன்வைக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நினைவூட்டினார்.
“அதற்கு பதிலாக முன்னோக்கி நகர்வோம், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம். அனைத்து குடிமக்கள், அனைத்து இனங்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களின் நலன்களைப் பாதுகாப்போம்,” என்று அவர் கூறினார்.
“நிச்சயமாக, கூட்டாட்சி அரசியலமைப்பில் விதிகள் உள்ளன, இது ஒரு பிரச்சினை அல்ல, அது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனவே, விஷயங்களை சிக்கலாக்க வேண்டாம்” என அன்வார் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பெர்சாத்து இளைஞர் தலைவர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமால், மலாய்க்காரர்கள் மட்டுமே பிரதமராகும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜசெகவின் மூத்த அரசியல்வாதியான டான்ஸ்ரீ லிம் கிட் சியாங் தனது வலைப்பதிவில் “மலேசிய அரசியலமைப்பு ஒரு மலேசியக் கனவை வழங்குகிறது. மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக முடியும் என்பது ஓர் ஒற்றை இனக் கனவு அல்ல” எனப் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்தே பெர்சாத்து இளைஞர் பகுதி தலைவர் சட்டத் திருத்தம் தொடர்பான அறைகூவலை விடுத்தார்.