Home நாடு மித்ராவை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுங்கள்! நம்பகத் தன்மை மேம்படும் – கணபதிராவ் வேண்டுகோள்

மித்ராவை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுங்கள்! நம்பகத் தன்மை மேம்படும் – கணபதிராவ் வேண்டுகோள்

513
0
SHARE
Ad

கிள்ளான்- மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவை (மித்ரா) அதன் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்த அதனை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்ற வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் முன்மொழிந்துள்ளார்.

சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்படுவதால் மித்ரா, அதன் வாரியத்திற்கும் பிரதமருக்கும் நேரடியாக அறிக்கை அளிக்க முடியும் என்றார் அவர்.

“மித்ராவை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுவது அதன் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும். ஏனெனில் நிதி அறிக்கைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். மித்ராவின் அனைத்து செயல்பாடுகளும் அதன் வாரியத்தால் கண்காணிக்கப்படும். இந்த மித்ரா வாரியம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களை உள்ளடக்கியிருக்கும்” என்பதையும் கணபதி ராவ் இன்று புதன்கிழமை (டிசம்பர் 27) தன் முகநூல் பக்கத்தின்வழி வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மித்ரா மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் அமர்த்தப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது இந்திய சமூகத்தில் பலத்த கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.

முன்பு பிரதமர் துறையின் மேற்பார்வையில் மித்ரா செயல்பட்டு வந்தது. இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான மித்ராவை தொடர்ந்து கண்காணிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்ததாக பெர்னாமா செய்தியை வெளியிட்டுள்ளது.

மித்ரா தனது நோக்கங்களை அடைவதை உறுதி செய்வதற்கான தனது பரிந்துரையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிசீலிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் கணபதி ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

மித்ரா மத்திய அரசாங்கத்தின் அமைப்புகளில் ஒன்றாக சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலம் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமல் ஏமாற்றத்தில் இருக்கும் இந்திய சமுதாயத்தில் அதிருப்திகளைத் தணிக்க முடியும். கடுமையான ஏமாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்திய சமுதாயத்தை மேலும் புறக்கணிக்காமல் ஒற்றுமை அரசாங்கமும் பிரதமரும் செயல்பட வேண்டும் என்றும் கணபதி ராவ் கேட்டுக் கொண்டார்.