எப்ரல் 26 – தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் பல வித்தியாசமான பதாகைகளும், சுவரொட்டிகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் தங்களது கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு கட்சியின் சின்னத்தை விளம்பரப் படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், நாட்டில் நடக்கும் பல முக்கிய பிரச்சனைகளை செய்தி வடிவில் தான் சொல்ல வேண்டுமா? ஏன் ஒரு கவிதை வடிவில் சொல்லக்கூடாது ? என்று தோன்றிய ஒரு சிறு கற்பனையின் விளைவு தான் கீழ்க்காணும் கவிதை
ஒரு முத்தம் – ஒரு பிரளயம்
ஆண் ஒருவன்
பெண்ணுக்கு முத்தம் இட்டால்
மோகத்தீ பெருகலாம் அவளுக்குள்!
பெண்ணொருத்தி ஆணுக்கு முத்தமிட்டால்
உறங்கும் காமம் உறுமிக் கொண்டெழலாம்.
குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால்
குமுறிக் கிளம்பும் பாசமும் பிணைப்பும்!
ஆனால்,
ஆணுக்கு ஆண் கன்னத்தில்
அன்புக்காக முத்தமிட்டால்
அரசியலில் பிரளயம் நிகழுமோ?
இதோ நிகழ்ந்திருக்கின்றதே!
ஒருவன் தந்த முத்தம் –
அதனால் ஒட்டு மொத்தம் இந்தியரும்
தந்து விட்டார் ஆதரவை;
சித்தம் தெளிந்து விட்டார் இந்தியர்;
எனத் தெரிவிக்கின்றார் பிரதமரும்!
சத்தம் இன்றி வாக்குச் சீட்டில்
தத்தம் முடிவை மக்கள் இடும் நாளாம்
மே மாதம் ஐந்தாம் தேதி
வந்தால் தெரியும் சேதி!
பித்தம் தெளிந்தது யாருக்கென்று!
-இரா.முத்தரசன்