Home இந்தியா அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தீவிரப் பிரச்சாரம்!

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தீவிரப் பிரச்சாரம்!

280
0
SHARE
Ad

புதுடில்லி : டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்ற முன்அறிவிப்பு (சம்மன்) 9 முறை வழங்கப்பட்டும் அவர் அதனைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்தார்.  பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் வியூகமாக, மார்ச் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மார்ச் 28-இல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரே இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அவர் சிறையில் இருந்ததால், ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தில் தொய்வு விழுந்தது. அவரின் கைதை அவர் சார்ந்த இந்தியா கூட்டணி அரசியல் சர்ச்சையாக்கியது. ஆனாலும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஆதாரங்களால் அவரின் ஊழலற்ற தோற்றம் சிதைந்தது எனலாம்.

பிரச்சாரம் முடியும் வரை அவர் சிறையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  அவர் சார்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டும் அல்ல! இந்தியா கூட்டணிக்கும்அரவிந்த் கெஜ்ரிவால் இல்லாத வெறுமை பட்டவர்த்தனமாக  தெரிந்தது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களை சமர்ப்பித்தார் கெஜ்ரிவால்.  கடந்த வெள்ளிக்கிழமை மே 10ஆம் தேதி  அவருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.  ஜூன் 1-ஆம் தேதி வரைக்கும்தான் அவர் வெளியில் இருக்கலாம். அன்றுதான் இந்தியப் பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கான கடைசி நாள்.

அடுத்த நாள் கெஜ்ரிவால் சிறைக்குத் திரும்ப வேண்டும். எனினும் டெல்லி முதல் அமைச்சர் என்ற முறையில் அவர் பிரச்சாரம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

நேற்று சனிக்கிழமை (மே 10) அவர் பிரம்மாண்டமான பிரச்சாரத்தை தெற்கு டில்லியில் இருந்து தொடங்கி விட்டார். அதற்கு முன்பாக அனுமன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார்.

சிறை வாசத்தாலும், இப்போதைய விடுதலையாலும், இந்தியா முழுமையையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கெஜ்ரிவால்.  இந்த விளம்பர பலத்தால் அவரது பிரச்சாரம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என ஆம் ஆத்மி கட்சியும், இந்தியா கூட்டணியும் எதிர்பார்க்கின்றன.

இதற்கிடையில் பாஜகவால் அவர் பழிவாங்கப்படுகிறார் என்ற ஆதரவு முழக்கங்கள் ஒருபுறமும் – அவரும் ஊழல்வாதிதான் என்ற எதிர்க் கணைகள் இன்னொரு புறமும் – வலம் வருகின்றன.

மோடி, மமதாவையும் ஸ்டாலினையும் கைது செய்வார்!

சிறையிலிருந்து வெளியானவுடன் மேற்கொண்ட பிரச்சாரத்தில் மோடியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம் என முழங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், ஒரே நாடு ஒரே தலைவர் என்ற ரீதியில் செயல்படும் மோடி, மீண்டும் வெற்றி பெற்றால் மமதா பானர்ஜியையும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினையும் கைது செய்து சிறையில் தள்ளுவார் என்றும் எச்சரித்தார்.

கெஜ்ரிவாலின் தீவிரப் பிரச்சாரம் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.