Home நாடு முகமட் சுக்கிக்குப் பதில் அரசாங்கத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார்?

முகமட் சுக்கிக்குப் பதில் அரசாங்கத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார்?

201
0
SHARE
Ad
முகமட் சுக்கி அலி

புத்ரா ஜெயா: நமது நாட்டின் அரசாங்க அலுவல்களிலும், பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர் அரசாங்கத் தலைமைச் செயலாளர். அரசாங்க ஊழியர்களுக்கெல்லாம் இவரே தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். அமைச்சரவையில் கலந்து கொண்டு அமைச்சரவைக்கான செயலாளராகவும் இவரே செயல்படுகிறார்.

நடப்பு அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ முகமட் சுக்கியின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்படுவார் என்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

மாதந்தோறும் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் அரசாங்க ஊழியர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் முகமட் சுக்கி ஓய்வு பெறும் தகவலை அறிவித்தார். அரசாங்கத் தலைமைச் செயலாளராக அவர் கலந்து கொள்ளும் கடைசிக் கூட்டம் இதுவென்றும் பிரதமர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முகமட் சுக்கி ஓய்வு பெற்ற பின்னர் அவரின் பணியை அரசாங்கம் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. அந்த பதவி நீட்டிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் முகமட் சுக்கிக்கு முக்கியப் பொறுப்புகள் காத்திருக்கின்றன என அன்வார் குறிப்பிட்டார். இதன் மூலம் முகமட் சுக்கி, ஒரு முக்கிய அரசாங்கப் பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்துள்ளன.

இதைத் தொடர்ந்து புதிய அரசாங்கத் தலைமைச் செயலாளராக யாரை அன்வார் நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.