Home நாடு தீபாவளி பொது விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் இப்ராகிம்

தீபாவளி பொது விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் இப்ராகிம்

267
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (அக்டோபர் 18) பிரிக்பீல்ட்ஸ் நியூ சென்ட்ரல் வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி பொது விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தன் துணைவியார் வான் அசீசாவுடன் கலந்து கொண்டார்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விருந்துபசரிப்பில்  ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா, இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன், துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“வான் அசிசாவும் நானும் பல இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடிமக்களும் இந்து சகோதரர்களும் இணைந்து, மகிழ்ச்சியும், ஒற்றுமையும், குடும்பப் பாசமும் நிறைந்த சூழலில் “மடானி 2025 தீபாவளி திறந்த இல்ல  விருந்துபசரிப்பு” விழாவைக் கொண்டாடினோம். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல், நினைவுப் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுதல், பாரம்பரிய உணவுகளை ருசித்தல் ஆகியவற்றோடு, நிகழ்த்தப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளும் இம்முறை கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை இன்னும் அதிகரித்தன; மலேசியாவின் பரந்த பண்பாட்டு அழகை வெளிப்படுத்தின” என அன்வார் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார் “நாட்டின் வலிமையின் ஆதாரம் ஒற்றுமையும் இணைப்பும்தான்” என வலியுறுத்தினார்.

“பலதரப்பட்ட மக்கள்தொகை மற்றும் பண்பாட்டு பல்வகைமைகள் மலேசியாவை தனித்துவப்படுத்துவதுடன், இத்தகைய தன்மை தொடர்ச்சியாக வளர்த்துப் பேண வேண்டிய, நமக்கு வாய்த்திருக்கும் ஒரு அரிய வரப்பிரசாதமாகும்; இது நிலையான அமைதி மற்றும் நலனுக்கான அடித்தளமாகும். நாம் மதம், இனம் அல்லது இனப்பிரிவில் வேறுபட்டவர்களாக இருந்தாலும், ஒருவரின் மனத்தையும் உணர்வுகளையும் மதித்து கவனித்தால் மட்டுமே நாம் சேர்ந்து பெற்றுள்ள நன்மைகளை நிலைநிறுத்த முடியும். பரஸ்பர மரியாதையும் புரிந்துகொள்ளுதலும் வழியாக மட்டுமே, உண்மையான அமைதி மற்றும் ஒற்றுமையுடன் கூடிய மலேசியாவை நாம் உருவாக்க முடியும்” எனவும் பிரதமர் தன் உரையில் தெரிவித்தார்.

தீபாவளி கொண்டாடும் இந்துப் பெருமக்களுக்கு தன் தீபாவளி வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.