Home இந்தியா பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் மரணம்

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் மரணம்

475
0
SHARE
Ad

sarap-jith-singhலாகூர்,  மே 3- பாகிஸ்தான் சிறையில் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி கோமா நிலையில் கடந்த ஆறு நாள்களாக உயிருக்குப் போராடிய இந்தியர் சரப்ஜித் சிங் (வயது 49) வியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

கடந்த 1990-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித் சிங் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அவரை வேறு ஓர் அறைக்கு மாற்றும்போது சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

அதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜின்னா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் மீளமுடியாத கோமா நிலையை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்புமாறு இந்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக சரப்ஜித் சிங் உயிரிழந்ததாக ஜின்னா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை பாகிஸ்தான் அரசும் இந்தியத் தூதரகத்திடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தியா வந்தடைந்தது உடல்:-

இதையடுத்து லாகூரிலிருந்து சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்து ஆட்சேபம் இல்லா சான்றிதழுடன் சரப்ஜித் சிங்கின் உடல் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சரப்ஜித் சிங்கின் உடல் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் வந்தடைந்தது. அங்கு பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல், மத்திய வெளிவிவகாரங்கள்துறை அமைச்சர் பிரணீத் கெயூர் ஆகியோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சரப்ஜித் சிங்கின் உடல் மற்றுமொரு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து சரப்ஜித்தின் சொந்த கிராமமான பிகிவிந்துக்கு உடல் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கு அவருக்கு வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

மூன்று நாள் துக்கம்:-

சரப்ஜித்தின் மரணத்தையொட்டி பஞ்சாபில் மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் மூன்று நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1 கோடி நிவாரணம்:-

சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகை அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ரூ. 25 லட்சம்: பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ரொக்கம் உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்துக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொடூர தாக்குதல்: மக்களவையில் தீர்மானம்

சரப்ஜித் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங்கை கொடூரமாகத் தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மக்களவையில் சரப்ஜித் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை அவைத் தலைவர் மீரா குமார் வாசித்தார். “சரப்ஜித் சிங்கின் மறைவை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளோம்.

அவர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரை தாக்கியவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்கின் மறைவுக்கு உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம்

“சரப்ஜித் சிங் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது. அவர் இந்தியாவின் வீர மைந்தன்; கடும் துன்பத்தையும் துணிவுடன் எதிர்த்துப் போராடினார்.

இந்த வழக்கில் மனிதாபிமான அடிப்படையில் செயல்படுமாறு இந்திய அரசு, சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு செவிசாய்க்காதது வருத்தமளிக்கிறது.

சரப்ஜித் சிங் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. இக்கொடூரமான கொலையை நிகழ்த்தியவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்றார் மன்மோகன் சிங்.

தூதரைத் திரும்பப் பெற வேண்டும்- ராஜ்நாத் சிங்:-

சரப்ஜித் சிங்கின் மரணம் துரதிருஷ்டவசமானது. ராஜீய ரீதியாக இந்தியா தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்காது.

இது ராஜீய ரீதியில் நமக்கு கிடைத்துள்ள தோல்வி. சரப்ஜித் சிங்கின் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு செல்ல வேண்டும். இச்சம்பவத்தைக் கண்டித்து பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட மாட்டோம் என்றும், தனது நாட்டில் உள்ள இந்திய கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவோம் என்றும் பாகிஸ்தான் அரசு உறுதியளிக்க வேண்டும். அதுவரை அந்நாட்டுடனான தூதரக உறவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.