பாகிஸ்தான், மே 3- சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே 1ம் திகதி அன்று பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்காவின் ‘நேவி சீல்’ என்ற அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையொட்டி, அவரது 2வது நினைவு தினம் நேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடைபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வட மேற்கு நகரமான குயெட்டாவில் பேரணி நடத்தப்பட்டது.
தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவு அமைப்பான ஜமியாத் உலமா இ-இஸ்லாம் என்ற அமைப்பினர் இந்த பேரணியை நடத்தினர்.
இதற்கு அந்த அமைப்பின் தலைவர் மவுலா இஸ்மல்லா தலைமை தாங்கினார். அதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.