கோலாலம்பூர், மே 8- மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை.
பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.
அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.