சென்னை, பிப்.01 – விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டு பிரச்சனை குறித்து கமல்ஹாசனின் அண்ணனும், விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சந்திரஹாசன் (படம்), இன்று இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின்போது மாநில உள்துறைச் செயலர் ராஜகோபால் மற்றும் திரைப்பட இயக்குநரும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவருமான அமீர் உடன் இருந்தார்கள்.
படத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்த வழக்கு எதிர்வரும் 4ஆம் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்கு முன்னதாக இரு தரப்பும் சமரசம் செய்து கொள்வதுடன் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கவும் செய்தால் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீடு மீட்டுக் கொள்ளப்படும் என்று தெரிகின்றது.
அவ்வாறு நடந்தால் திங்கட்கிழமையே விஸ்வரூபம் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.