மும்பை, பிப்.2-நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் விஸ்வரூபம். இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தமிழகத்தில் திரையிடுவதற்கு தமிழக அரசு இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் இப்படத்தின் இந்தி பதிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. படத்தில் இந்தி வசன டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடைவடைந்து பிப்ரவரி 1-ந்தேதி ‘விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மும்பையில் உள்ள தியேட்டர்களும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. இந்தி பதிப்பை வெளியிடுவதற்காக நடிகர் கமல்ஹாசன் நேற்றுமுன்தினம் மும்பை வந்தார். இதனையடுத்து நேற்று மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது.
மும்பையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க விஸ்வரூபம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு தியேட்டரிலும் 10 முதல் 15 வரையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தியேட்டர் வளாகங்களில் ரசிகர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தீவிர சோதனைக்கு பின்னரே ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் உள்ள அலிசான் தியேட்டரில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்பட இருந்தது. இதனையடுத்து நேற்று காலை அங்கு திடீரென வந்த இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சிலர் விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த விஸ்வரூப் பட போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். சிலர் தியேட்டர் மேலாளரை சந்தித்து படத்தை திரையிட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அந்த தியேட்டர் மூடப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில், விஸ்வரூபம் திரையிடப்படும் தியேட்டர்களில் கலவரம் ஏதும் நிகழாவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி பிரித்வி ராஜ் சவான் நேற்று காலை உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்