இஸ்லாமாபாத், மே 13 – பாகிஸ்தானின் 65 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயக புரட்சி நிகழ்ந்துள்ளது.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, அதன் ஐந்தாண்டு பதவி காலம் முடித்து மீண்டும் தேர்தல் நடந்தப்பட்டு புதிய அரசு அமைகிறது.
இந்தப் புதிய அரசாங்கத்தின் பிரதமராகப் பதவியேற்கிறார் நவாஸ் ஷெரீப் (வயது 63).
ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்துள்ள இவர், தற்போது மூன்றாவது முறையாக பதவியேற்கிறார். அதோடு பதவியேற்பு தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விவாதித்து வருகிறார்.
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் 272 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், நான்கு மாநிலங்களுக்கான தேர்தலும் நடந்தது.
நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், பெனசிர் புட்டோவின் மகன் பிலால் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், இம்ரான் கானின் தேரிக் -இ- இன்சாப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நாடாளுமன்றத்தின் கீழ் மொத்தமுள்ள 272 இடங்களில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட் சிக்கு 125 இடங்கள் கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 32 இடங்களும், தேரிக்-இ-இன்சாப் கட்சிக்கு 34 இடங்களும், ஜாமியத் உலேமா -இ- இஸ்லாம் கட்சிக்கு 11 இடங்களும் கிடைத்துள்ளன.
அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற முறையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, தோழமை கட்சிகளுடன் இணைந்து, ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
நவாஸ் ஷெரீப் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.