பினாங்கு, மே 17 – பொதுத்தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் வேறு நாட்டிற்கு குடியேறலாம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் அகமட் சாகிட் ஹமீடி வெளியிட்டுள்ள கருத்துக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“உள்துறை அமைச்சரின் கருத்துப்படி பார்த்தால் பினாங்கில் உள்ள தேசிய முன்னணி ஆதரவாளர்களையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லலாமா? என்றும் லிம் குவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் 30 தொகுதிகளை மக்கள் கூட்டணி கைப்பற்றி மீண்டும் அரசாங்கத்தை தக்க வைத்துக்கொண்டது. அதோடு பினாங்கில் மொத்தமுள்ள வாக்குகளில் 66 சதவிகித வாக்குகள் மக்கள் கூட்டணிக்கே கிடைத்துள்ளது. இது கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலைக் காட்டிலும் கூடுதல் ஆகும்.
அதே நேரத்தில் மக்கள் கூட்டணியை ஆதரிப்பவர்களைப் பழிவாங்கும் தேசிய முன்னணி போல் தமது நிர்வாகம் இல்லை என்றும் லிம் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் திரங்கானுவில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றிருந்த 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் முன்பு வழங்கப்பட்டிருந்த வசதிகள் அனைத்தையும் அம்மாநில மந்திரி பெசார் அகமட் சைட் மீண்டும் எடுத்துக்கொண்டார் என்று லிம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு அனைவரையும் சமமாக மதித்து இனம்,மதம், அரசியல் வேறுபாடுகளின்றி ஆட்சி நடத்தும். இது ஜனநாயக நாடு. மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்காதவர்களை நாங்கள் வஞ்சிக்க மாட்டோம்” என்றும் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
பொதுத்தேர்தல் முடிவில் திருப்தி இல்லாதவர்கள் வேறு நாட்டை தேடிச் செல்லலாம் என்று நாட்டின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேறுள்ள அகமட் நேற்று உத்துசான் மலேசியா நாளிதழில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.