கோலா கங்சார், மே 18 – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள 9 உறுப்பினர்களில் 6 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் துவாலாங் சேகா சட்டமன்ற உறுப்பினர் நோலீ அஸிலின் முகமட் ராட்ஸி, டத்தோ ருஸ்னா காசிம் (பெஹ்ராங்), டத்தோ சம்சுதீன் அபு ஹஸ்ஸான் (ஆயர் கூனிங்), முகமட் நிஸார் சகாரியா (பெலாஞ்சா) டத்தோ சகாருல் ஸமான் யாக்யா (ரங்குப்) மற்றும் டாக்டர் முகமட் அமீன் சகாரியா (பத்து குராவ்) ஆகியோர் ஆவர்.
மீதமுள்ள 3 பேரான டத்தோ சாரனி முகமட் (கோத்தா தாம்பான்), டத்தோ ஸைனோல் பாட்ஸி பகாருதீன் (சுங்கை மானிக்), டத்தோ முகமட் சாகிர் அப்துல் காலிட்(காமுண்டிங்) ஆகியோர் ஏற்கனவே ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள்.
எனவே அவர்கள், தற்போது இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை இஸ்தானா இஸ்கண்டாரியாவில் பேரா மாநில பேரரசர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பேரா மாநில மந்திரி பெசார் டத்தோ டாக்டர் ஸாம்பிரி அப்துல் காதிர், அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஷரிபா சுல்கிப்ளி மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோ அகமட் சாசிட் ஹமீடி, சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸீஸ், ஈப்போ டத்தோ பண்டார் டத்தோ ரோஷிடி ஹாசிம், பேரா காவல்துறை துணை ஆணையர் டத்தோ முகமட் சுக்ரி டாலான் ஆகியோர் கலந்து கொண்டனர்.