Home அரசியல் “நான் விரைவில் கைது செய்யப்படலாம்” – அன்வார் கூறுகின்றார்.

“நான் விரைவில் கைது செய்யப்படலாம்” – அன்வார் கூறுகின்றார்.

503
0
SHARE
Ad

ANWARசிரம்பான், மே 18 நேற்று இரவு (மே 17 ) சிரம்பானில் நடைபெற்ற கறுப்பு பேரணி 505 கூட்டத்தில் கலந்து கொண்ட ஏறத்தாழ 20,000 பேர் முன்னிலையில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விரைவில் தான் கைது செய்யப்படலாம் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் திட்டம் அதுவாக இருக்கலாம் என மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அன்வார் கூறினார்.

பெரும்பாலும், இளைஞர்களும், யுவதிகளுமாக இந்தக் கூட்டத்தில் திரண்டிருந்தார்கள்.

ஆனால், என் மனதைத் தொட்ட ஒரு திருப்திகரமான அம்சம் என்னவென்றால் இந்த நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைய சமுதாயத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என்பதுதான் என்றும் அன்வார் கூறினார்.

இதுதான் புதிய மலேசியாவின் உணர்வு. இங்கு கூடியுள்ளவர்கள் சுயகௌரவம் கொண்டவர்கள். சுதந்திரத்தையும், நீதியையும் காதலிப்பவர்கள். பிஆர்எம் 1 மூலம் கொடுக்கப்படும் பணத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் என்றும் கூறிய அன்வார்,தேசிய முன்னணி அரசாங்கத்தை நாம் மாற்ற வேண்டும் என கூட்டத்தினரின் பலத்த ஆரவாரத்திற்கிடையே முழக்கமிட்டார்.

நாடு முழுமையிலும் அன்வார் நடத்தி வரும் கறுப்பு 505 பேரணி கூட்ட வரிசையில் நேற்று சிரம்பானிலும் இந்த மாபெரும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டங்களில் எல்லாம் நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்த தேர்தல் முறைகேடுகள் குறித்து அன்வார் கலந்து கொள்ளும் கூட்டத்தினருக்கு விளக்கி வருகின்றார்.

சீனர்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்ததில் என்ன தவறு?

அம்னோ எங்களின் வெற்றியைப் பறித்து விட்டது என்று குற்றம் சாட்டிய அன்வார், அம்னோ தேர்தலில் ஏமாற்றியதால்தான் தான் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை என்று கூறினார்.

“13வது பொதுத் தேர்தலில் வென்றது நாங்கள்தான். ஏராளமான முறைகேடுகள், ஏமாற்று வேலைகளினால் தேர்தல் ஆணையம் அறிவித்த தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கவில்லை. நிராகரிக்கிறோம்” என்று அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.

“தேர்தல் முறையாக நடத்தப்பட்டிருந்தால் நாங்கள் எங்களின் தோல்வியை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருப்போம்” என்று தனது உரையில் தெரிவித்த அன்வார், சீனர்கள் மக்கள் கூட்டணிக்கு வாக்களித்ததால் அவர்களைக் குறைகூறும் பிரதமர் நஜிப்பையும் சாடினார்.

சீனர்கள் தங்களின் ஜனநாயக உரிமைப்படி வாக்களித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அன்வார் வினவினார்.

“இன்றைய மலாய், சீன, இந்திய இளைஞர்கள் எல்லாரையும் கேளுங்கள். எல்லாருடைய பதிலும் ஒன்றாகத்தான் இருக்கும். தேர்தல் முறைகேடுகளினால் வென்ற அம்னோ-தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அவர்கள் அனைவரின் நோக்கமுமாகும். மக்களுக்கு சேர வேண்டிய செல்வம் மீண்டும் மீண்டும் கொள்ளையடிக்கப்படுவதை இன்றைய மலாய், சீன, இந்திய, டாயாக் வாக்காளர்கள் யாரும் விரும்பவில்லை” என்றும் அன்வார் முழக்கமிட்டார்.