Home நாடு 5 ஆண்டுகளுக்குள் இந்தியர் பிரச்சனையைத் தீர்ப்பேன் – வேதமூர்த்தி வாக்குறுதி

5 ஆண்டுகளுக்குள் இந்தியர் பிரச்சனையைத் தீர்ப்பேன் – வேதமூர்த்தி வாக்குறுதி

581
0
SHARE
Ad

waythaகோலாலம்பூர், மே 18 – புதிய துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவு தலைவர், பி.வேதமூர்த்தி அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகவும், இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலைமையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

குடிபெயர்ந்த தோட்டப் பாட்டாளிகள், நாடற்ற பிரஜைகள், இந்திய சமுதாயத்திற்கான கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அம்சங்கள் போன்ற துறைகளில் தான் கவனத்தைச் செலுத்தப் போவதாகவும் பிரதமர் துறை துணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வேதமூர்த்தி கூறியுள்ளார்.

தனக்கு கிடைத்துள்ள நியமனம், இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு வாய்ப்பு என்றும் இனிமேல், ஏழை மக்களின் குரலை அரசாங்கத்தின் செவிகளுக்கு கொண்டு சென்று, இந்தியர்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இன்று கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய 47 வயது வழக்கறிஞரான வேதமூர்த்தி, தனது நியமனத்தைக் குறைகூறியுள்ள அன்வார் இப்ராகிம், ஜசெக, மற்றும் இணையத்தள எழுத்தாளர்களையும் சாடினார்.

“குறை கூறல்கள் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் என்ன வேண்டுமானல் சொல்லிக் கொண்டே இருங்கள். நீங்கள் சொல்வதெல்லாம் தவறு என்பதை காலப் போக்கில் நிரூபிப்போம். நீங்கள் சொல்கின்ற வார்த்தைகளை நீங்களே திரும்பப் பெறுவீர்கள். மக்கள் உங்களை அடுத்த தேர்தலில் கவனித்துக் கொள்வார்கள்” என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

துணையமைச்சர் பதவிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் சம்பந்தமில்லை

தனது துணையமைச்சர் நியமனத்திற்கும், தேசிய முன்னணியோடு தான் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் வேதமூர்த்தி கூறினார்.

அந்த ஒப்பந்தத்தை செய்ததால்தான் தனக்கு துணையமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுவதையும், கிளந்தான் மாநிலத்தில் பிறந்தவரான அவர் மறுத்தார்.

தனக்கும் தனது சகோதரர் உதயகுமாருக்கும் இடையிலான பிரச்சனை குறித்தும் பேசிய வேதமூர்த்தி, ஹிண்ட்ராப்பிலிருந்து உதயகுமார் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் அதனால் ஹிண்ட்ராப் குறித்து விமர்சிக்க அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

“ஹிண்ட்ராப் ஓர் அரசியல் கட்சியல்ல. எனது நியமனமும் அரசியல்-சார்பற்ற அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் செய்யப்பட்டது” என்றும் வேதமூர்த்தி கூறியிருக்கின்றார்.

-பெர்னாமா