Home இந்தியா கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்- மத்திய அரசு முடிவு

கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்- மத்திய அரசு முடிவு

597
0
SHARE
Ad

iplபுதுடெல்லி, மே.20- ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, இப்போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது.

அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டங்களில் சூதாட்டப்பேரத்தில் ஈடுபட்டு லட்ச, லட்சமாக பணத்தை அள்ளியது ரசிகர்களிடையே வெறுப்பேற்றி உள்ளது.

ஐ.பி.எல். போட்டியை தடை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஐ.பி.எல். போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ளன.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் சூதாட்டப்புகாரை காரணம் காட்டி ஐ.பி.எல். போட்டிகளை தடை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே சூதாட்டத்தை தடைசெய்வதற்கு ஏற்ற வகையில் வலுவான ஒரு சட்டத்தை இயற்றி அதை கண்டிப்புடன் அமல்படுத்தலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இதுபற்றி முதற்கட்டமாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்குடன், சட்டத்துறை மந்திரி கபில்சிபல் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த கபில்சிபல், ‘விளையாட்டுத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்குடன் நான் பேசினேன்.

சூதாட்ட தீங்கு தொடர்பாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும். இது தொடர்பான வரைவை விரைவில் தயாரிப்போம். சூதாட்டம் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்தநிலையிலும், மக்கள் அதை தூக்கி அடித்து விட்டு விளையாட்டின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்’ என கூறினார்.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும், தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய வீட்டுவசதித்துறை மந்திரி அஜய் மக்கான் வலியுறுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பினுள் வருவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

தேசிய அளவிலான அணியை தேர்வு செய்கிற முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பு, தனிப்பட்ட அங்கம் என்று கூறிக்கொள்ள முடியாது’ எனக்கூறினார்.

இவர் சமீப காலம்வரை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.