புத்ரா ஜெயா, மே 20 – “எனது கருத்தை திரித்து கூறியதற்காக ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் திருப்தி இல்லாதவர்கள் வேறு நாட்டிற்கு குடியேறலாம் என்று கடந்த வாரம் உள்துறை அமைச்சரான சாஹிட் கருத்து தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவரது கருத்துக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பினாங்கு முதலமைச்சரும், ஜசெக பொதுச்செயலாளருமான லிம் குவான் எங், “சாஹிட் வெளியிட்ட கருத்துக்கு அவர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இவ்விவகாரம் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்தில், “இது அப்பனுடைய நாடு என்று நினைத்து இது போன்று கூறுகிறீர்களா?” என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று கருத்து கூறியிருக்கும் சாஹிட், “ இது உங்க அப்பனுடைய நாடும் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.