கோலாலம்பூர், மே 21 – ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவியை ஏற்றுக் கொண்டதற்காக டீ சியூ கியோங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மசீச கட்சியின் மத்திய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூலாய் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மசீச கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான டீ சியூ கியோங், அரசாங்கப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்ற மசீசவின் தீர்மானத்தையும் மீறி ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவி ஏற்றார்.
தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக அரசாங்கப் பதவிகளையோ, அமைச்சரவைப் பதவிகளையோ மசீச கட்சி ஏற்கப்போவதில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் சுவா சொய் லெக் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுவா சொய் லெக் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ ஜோகூர் சுல்தானின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் வேறுவழியின்றி ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக தான் பதவி ஏற்றுள்ளதாக டீ சியூ கியோங் அறிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே மசீச எந்த ஒரு அரசாங்கப் பதவிகளையும் ஏற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
கட்சியின் தீர்மானத்தையும் மீறி டீ சியூ பதவி ஏற்றுள்ளதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மசீச வின் தற்போதைய 4 செனட்டர்களான சியூ லியான் கெங், சியூ லீ கியோக், லிம் நிகெட் யூன் மற்றும் கான் பிங் சியூ ஆகியோரும் பதவி விலகப் போவதாக சொய் லெக் அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை மசீச வைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க பிரதமர் நஜிப் துன் ரசாக் முடிவெடுத்த போது, அதை ஏற்றுக் கொள்ள சுவா சொய் லெக் மறுத்துள்ளார்.
அதோடு மசீச கட்சி எந்த ஒரு அரசாங்கப் பதவிகளையும் ஏற்கப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.