Home கருத்தாய்வு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொடுத்த புகாரையும், பிரிட்டனில் தொடுத்துள்ள வழக்கையும் வேதமூர்த்தி திரும்பப் பெறவேண்டும்!

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொடுத்த புகாரையும், பிரிட்டனில் தொடுத்துள்ள வழக்கையும் வேதமூர்த்தி திரும்பப் பெறவேண்டும்!

778
0
SHARE
Ad

waythamoorthyமே 21 – தேசிய முன்னணி அரசாங்கம் மலேசியாவில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது என பிரிட்டனில் நாடு கடந்து வாழும் போது, ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி அன்றைய கால கட்டத்தில் ஐக்கிய நாடுகளின் சபைக்கான மனித உரிமை மன்றத்தில் புகார் மனு ஒன்றை சமர்ப்பித்ததாக அறிவித்திருந்ததை மக்கள் யாரும் இதுவரை மறக்கவில்லை.

#TamilSchoolmychoice

அவ்வாறு தான் புகார் மனு கொடுத்ததை வேதமூர்த்தியும் இதுவரை மறுத்ததில்லை.

எந்த தேசிய முன்னணி அரசாங்கத்தை எதிர்த்து புகார் மனு கொடுத்தாரோ அதே அரசாங்கத்தின் அமைச்சரவையில் துணையமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு விட்ட காரணத்தால், தான் கொடுத்த புகார் மனுவை இனி வேதமூர்த்தி உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதுதான் நியாயமானதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், தார்மீக அடிப்படையில், நேர்மையான கண்ணோட்டத்துடன் பார்த்தால், இதுவரை ஹிண்ட்ராப் சார்பாக, தேசிய முன்னணி அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்றெல்லாம் தேசிய முன்னணி மீது வேதமூர்த்தியும் அவரது குழுவினரும் அடுக்கிய, குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

தேசிய முன்னணியை ஆதரித்தபோதே வாபஸ் பெற்றிருக்க வேண்டும்!

நியாயமாகவும், நேர்மையாகவும் பார்த்தால் எப்போது தேசிய முன்னணிக்கு வாக்களிப்போம் வாருங்கள் என்று வேதமூர்த்தி அறைகூவல் விடுத்தாரோ, எப்போது தேசிய முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தாருங்கள் என்று முழக்கமிட்டாரோ அப்போதே வேதமூர்த்தி, ஐக்கிய நாட்டு சபையில் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகத் தான் சமர்ப்பித்த புகார் மனுவையும் வாபஸ் பெற்றிருக்க வேண்டும்.

பரவாயில்லை. இப்போதும் காலம் கடந்து விடவில்லை.

இப்போதோ, அதே தேசிய முன்னணி அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவியையும் ஏற்றுக் கொண்டு அந்த தேசிய முன்னணி அரசின் ஓர் அங்கமாகவே வேதமூர்த்தி இன்றைக்கு மாறிவிட்டார்.

எனவே, இனியும் தாமதிக்காமல், பொறுப்புணர்வோடு, ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்றத்தில் மலேசியாவுக்கு எதிராக செய்த புகார்களை அவர் வாபஸ் பெற்றுக் கொள்வதுதான், நேர்மையான, நியாயமான அரசியல் பண்பாகும்.

என்னவாயிற்று பிரிட்டனில் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு?

அதேவேளையில், பிரிட்டனின் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகவும், தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுத்திருப்பதாகவும் வேதமூர்த்தி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பிரிட்டனில் வாழ்ந்த காலத்தில்கூட இந்த வழக்கை தீவிரமாக மேற்கொள்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும்தான் லண்டனில் அவர் தங்க வேண்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய சமுதாயத்தை தேசிய முன்னணி அரசாங்கத்திடம் ஒப்படைத்துச் சென்றபோது – நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தபோது – அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து காப்பாற்றாமல், அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டது என்றும்,

அதனால்தான், இந்தியர்கள் இன்றைக்கு இந்த அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்றும்,

எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கு என்றும் அன்றைக்கு வேதமூர்த்தி தரப்பிலும் அவர் சார்ந்திருக்கும் ஹிண்ட்ராப் தரப்பிலும் கூறப்பட்டது.

இந்த தேன் கலந்து வார்த்தைகளை முழுமையாக நம்பித்தான் – இதோ முளைத்துவிட்டது நமக்கென ஒரு விடிவெள்ளி என்ற நப்பாசையில்தான் அன்று – 2007ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி – இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கோலாலம்பூரின் வீதிகளில் திரண்டனர்.

போராட்டம் நடத்தி, தேசிய முன்னணி அரசாங்கத்தையே – அதன் ஆணிவேரையே அசைத்து, ஆட்டம் காணச் செய்தார்கள்.

வழக்கின் விவரங்களை பகிரங்கமாக அறிவியுங்கள்!

சரி! என்னவாயிற்று அந்த வழக்கு?

அந்த வழக்குக்காக திரட்டப்பட்ட இலட்சக்கணக்கான ரிங்கிட்டுக்கான கணக்குகள் எங்கே?

அந்த வழக்குக்கு நிதியுதவி செய்த நல்லுள்ளங்கள் இன்னும் நம்மிடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்!

அந்த வழக்கு நீதிமன்றத்தில் உண்மையிலேயே சமர்ப்பிக்கப்பட்டதா? அப்படியென்றால் அந்த வழக்குக்கான குறியீட்டு எண் – reference number – என்ன?

இலண்டனில் அந்த வழக்கை நடத்துகின்ற வழக்கறிஞர் யார்?

என்பது போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவே இல்லை. இனியாவது வெளியிடப்படுமா என்பதும் தெரியவில்லை!

இதுகுறித்தும் வேதமூர்த்தி இனியும் மௌனம் காக்காமல் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும்.

இந்த வழக்கு வேதமூர்த்தி என்ற தனி ஒரு மனிதனின் வழக்கோ, ஹிண்ட்ராப் என்ற தனியானதோர் அமைப்பின் வழக்கோ அல்ல!

மலேசிய இந்தியர்கள் சார்பாக, மலேசிய இந்தியர்களுக்காக போடப்பட்ட வழக்கு!

எனவே, இந்த வழக்கின் விவரம் குறித்து இந்திய சமுதாயத்திற்கு அறிவிக்க வேண்டிய கடப்பாடும், கடமையும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேதமூர்த்திக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உண்டு!

அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுவிட்ட காரணத்தால், இனி அந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று வேதமூர்த்தி அறிவிக்க வேண்டும்!

அல்லது அப்படியே அந்த வழக்கு உண்மையிலேயே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் அதனை வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன் என்று வேதமூர்த்தி நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தான் ஏற்றுக் கொண்டுள்ள துணையமைச்சர் பதவிக்கு உண்மையானவராக வேதமூர்த்தி இந்த தருணத்தில் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனது கடந்த கால நடவடிக்கைகளுக்கு அவர் முறையான விளக்கம் அளிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும் – மக்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளில் செய்வது இருக்கட்டும்! இப்போது வாபஸ் பெறுங்கள்!

Waytha-UNமலேசிய அரசுக்கு எதிரான ஐக்கிய நாட்டு சபை புகார்களும், அவர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் – அதுவும் மலேசியாவின் நற்பெயரை அயல்நாட்டு மன்றங்களில் களங்கப்படுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்ட இந்த செயல்கள் எல்லாம் அப்படியே இருக்கும் பட்சத்தில் – அவை வாபஸ் பெறப்படாமல் இருக்கும் பட்சத்தில்;

இவற்றுக்கெல்லாம் மூலகர்த்தாவான வேதமூர்த்தி மட்டும் துணையமைச்சராக அதே அரசாங்கத்தில் தொடர்வது முறையான அரசியல் நடைமுறை அல்ல!அதனால்தான் எழுகின்றன இத்தனை எதிர்ப்புக் குரல்களும்!

வேதமூர்த்தி, எந்த அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தாரோ அதே அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவியையும் ஏற்றுக் கொண்டு – அடுத்த ஐந்தாண்டுகளில் அதனைச் செய்து முடிக்கின்றேன் – இதனைச் செய்து முடிக்கின்றேன் – என்று அறிவிப்புகள் செய்வதை முதலில் நிறுத்தி விட்டு,

ஐக்கிய நாட்டு சபையில் சமர்ப்பித்த புகார் மனுக்களைத் திரும்பப் பெறுவதும் – பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தொடுத்ததாக கூறப்படும் வழக்கின் உண்மை நிலையை எடுத்துரைப்பதும் – அல்லது அந்த வழக்கை வாபஸ் பெறுவதும்தான்,

வேதமூர்த்தி, தான் வகிக்கும் துணையமைச்சர் பதவிக்கும் – தான் சார்ந்திருக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் கடமையுணர்வோடு செய்யக் கூடிய உண்மையான – நேர்மையான – விசுவாசமான – கைங்கர்யமாகும்.

-இரா.முத்தரசன்