இஸ்லாமாபாத், மே 22- சீனப் பிரதமர் லீ கெகியாங் இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பாகிஸ்தான் செல்கிறார்.
அவரை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து வருகிறது. பாகிஸ்தான் வான் எல்லையில் லீ கெகியாங்கின் சிறப்பு விமானம் நுழைந்த உடன் 6 போர் விமானங்கள் அவரது விமானத்தை பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஜே.எஃப்.17 ரக போர் விமானங்கள், நூர் கான் விமானப்படை தளம் வரை சீனப் பிரதமரின் விமானத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்.
அங்கு லீ கெகியாங்கிற்கு 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் தற்காலிக பிரதமர் மிர் ஹசார் கான் கோசோ, பிரதமராக பதவியேற்கவுள்ள நவாஸ் ஷெரீப் ஆகியோர் அவரை விமான தளத்தில் வரவேற்கின்றன.
சர்தாரி மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோர் தனித்தனியாக லீ கெகியாங்கிற்கு விருந்து அளிக்கின்றனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள லீ கெகியாங்கிற்கு ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ எனப்படும் அந்நாட்டின் மிகப் பெரிய விருது வழங்கப்படுகிறது.