Home அரசியல் ம.இ.கா. இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கு டி.மோகன் மீண்டும் போட்டியிட மாட்டார்!

ம.இ.கா. இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கு டி.மோகன் மீண்டும் போட்டியிட மாட்டார்!

503
0
SHARE
Ad

mohanகோலாலம்பூர், மே 26 – எதிர்வரும் ம.இ.கா. கட்சித் தேர்தல்களில் இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்குத் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என நடப்பு இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகன் (படம்) அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனக்குப் பதிலாக, இளைய சமுதாயத்தின் சிந்தனைகளோடும், உணர்வுகளோடும் இணைந்து பணியாற்றக் கூடிய மற்ற தலைவர்களுக்கு வழிவிட்டு தான் ஒதுங்கிக் கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தல்களில் போட்டியிட தனக்கு தகுதி இருந்தாலும், மிகுந்த சிந்தனைக்குப் பின்னர், இளைஞர் பகுதியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர் பகுதியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர்  டி.மோகன் தெரிவித்தார்.

1999ஆம் ஆண்டில் பூச்சோங் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய மோகன் பின்னர், இளைஞர் பகுதியின் தேசியத் தலைவராக உயர்ந்தார்.

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும், நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலிலும் சிலாங்கூர் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

கட்சித் தேர்தல்கள் நடைபெறும் போது தேசிய உதவித் தலைவர் பதவிக்கு டி.மோகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய இளைஞர் பகுதித் தலைவர் பதவி காலியாவதால் இந்த பதவியைக் கைப்பற்ற கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடப்பு இளைஞர் பகுதித் துணைத் தலைவர் முகிலன் மற்றும் டத்தோ ரமணன் ஆகிய இருவரும் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கு குறி வைத்திருப்பதாக ம.இ.கா. வட்டாரங்கள் தெரிவித்தன.