பத்துஆராங் – சிலாங்கூரில் உள்ள தேசிய மாதிரி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியின் திடல் வசதிக்கு உரிய நடவடிக்கையை மஇகா மேற்கொள்ளும் – மேலும் அருகில் உள்ள நிலம் குறித்து ஆய்வு செய்து அதனை பள்ளிக்கு பெற்றுத் தருவதற்கான முயற்சிகளையும் எடுக்கும் என இந்தப்பள்ளிக்கு வருகை தந்த மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பள்ளி வாரியத்தின் அழைப்பின் பேரில் வருகை புரிந்த டி.மோகன் பள்ளியை பார்வையிட்ட பொழுது இவ்வாறு கூறினார். இவருடன் செலயாங் மஇகா தொகுதித்தலைவர் எம்.பி.ராஜா, செயலாளர் கெங்கா நாயுடு, வாரியத்தலைவர் டத்தோ லோகா, மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
பள்ளி வளாகத்தைப் பார்வையிடும் மோகன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுவினர்…
பள்ளியின் திடல் சிறியதாக அமைந்துள்ள நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதனை விரிவுபடுத்தவும், அருகில் அமைந்திருக்கும் நிலத்திற்கு முறையாக பதியவும் மஇகா ஆவன செய்யும் என்றும் மேலும் மாநில அரசாங்கத்திடம் பேசி அந்த நிலத்தை பள்ளியின் திடலோடு இணைக்கும் முயற்சியும் முடுக்கிவிடப்படும் என்றார் அவர். எனவே, அந்த நிலம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளுமாறு டத்தோ டி.மோகன் பள்ளி வாரியத்திடம் கேட்டுக்கொண்டார்.
டி.மோகனுடன், செலாயாங் தொகுதி மஇகா தலைவர் எம்.பி,ராஜா (நடுவில்) – பள்ளி நிலைமை குறித்து விவாதிக்கின்றனர்…
நமது சமுதாய மாணவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதனைத்தொடர்ந்து இந்தப்பள்ளியின் திடல் வசதிக்கான நிலம் தொடர்பில் தொகுதி மஇகா உறுதுணையாக இருந்து செயல்படும் என டி.மோகனுடன் வருகை தந்த எம்.பி.ராஜா குறிப்பிட்டார்.
“திடல் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்களின் விளையாட்டுத்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறோம். இத்தகைய சூழலில் விரைவில் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என டி.மோகன் நம்பிக்கை தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வேளையில் எங்களின் பிரச்சனைக்கு செவி கொடுத்து நேரில் வருகை புரிந்தமைக்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என பள்ளி வாரியத்தினர் கூறினர்.
பள்ளி நிர்வாகத்தினருடன் டி.மோகன்…