Home அரசியல் “வேதமூர்த்தியே இந்தியர் பிரச்சனையைக் கையாள பொருத்தமானவர்” – துங்கு அசிஸ் கருத்து நியாயமா?

“வேதமூர்த்தியே இந்தியர் பிரச்சனையைக் கையாள பொருத்தமானவர்” – துங்கு அசிஸ் கருத்து நியாயமா?

476
0
SHARE
Ad

Tunku-Aziz---Sliderமே 26 – முன்னாள் செனட்டரும், ஜசெகவின் முன்னாள் உதவித் தலைவருமான துங்கு அசிஸ், துணையமைச்சராக நியமனம் பெற்றுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்திதான் இந்தியர் பிரச்சனைகளைக் கையாளப் பொருத்தமானவர் என கருத்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

துங்கு அசிஸ் வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தும் அனைத்துல இயக்கமான டிரான்பேரன்சி இண்டர்நேஷனல் என்ற இயக்கத்தின் முன்னாள் தலைவருமாவார்.

மனித உரிமைகளுக்காக அடிமட்ட மக்களுக்குடன் பழகிப் போராடிய போராட்டவாதியான வேதமூர்த்திக்கு இந்தியர்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பது தெளிவாகத் தெரியும் என்றும் கூறியிருக்கின்றார்.

அதனால், அமுல்படுத்த வேண்டிய சரியான திட்டங்கள் என்ன, இந்தியர் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன என்பதையும் அவர் நன்கு அறிந்திருப்பார்.

புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தியர்களை முன்னேற்றுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ஐந்தாண்டு திட்ட வரைவினை செயல்படுத்துவதற்கு ஒரு பொருத்தமான சமூகப் போராளியான வேதமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தன் மூலம் நஜிப் துன் ரசாக் சரியானமுடிவையே எடுத்துள்ளார் என்றும் துங்கு அசிஸ் கூறியுள்ளார்.

“வேதமூர்த்திதான் இதனைச் செயல்படுத்துவதற்கு சரியான தேர்வு. பொருத்தமான பணிக்கு பொருத்தமான நபரையே பிரதமர் தேர்ந்தெடுத்து தனது அறிவாற்றலை நஜிப் நிரூபித்துள்ளார்” என்றும் துங்கு அசிஸ் ஃபிரி மலேசியா செய்தி வலைத் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியர்கள் நஜிப்புக்கும், வேதமூர்த்திக்கும் ஆதரவு தர வேண்டும் என்றும் துங்கு அசிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

துங்கு அசிசுக்கு இந்தியர் பிரச்சனை தெரியுமா?

துங்கு அசிசின் இந்த கருத்து, வேதமூர்த்தி நியமனத்தால் ஏற்கனவே பொங்கிக் கொண்டிருக்கும் இந்திய சமுதாயத்திலும், ம.இ.காவிலும் மேலும் கண்டனங்களை நிச்சயம் உருவாக்கும்.

ஒரு காலத்தில் துங்கு அசிசின் கருத்துக்கு மக்கள் மன்றத்தில் மதிப்பிருந்தது உண்மைதான். ஆனால், பின்னர் அவர் ஜசெகவில் சேர்ந்து, செனட்டராக நியமிக்கப்பட்டு, ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார்.

ஜசெகவின் மூலம் அரசாங்கப் பதவியைப் பெற்று அனுபவித்து விட்டு, அந்த பதவிக் காலம் முடிந்தவுடன் இப்போது ஜசெகவிலிருந்து விலகி ஜசெகவிற்கு எதிராகவும் மக்கள் கூட்டணிக்கு எதிராகவும் கருத்துக்களை சொல்லி வருபவர் அவர்.

எனவே, துங்கு அசிசுக்கு இந்திய சமுதாயத்தின் பிரச்சனை பற்றி எவ்வளவு தூரம் தெரியும் – அப்படியே தெரிந்தாலும் அந்த பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க வேதமூர்த்திதான் பொருத்தமானவர் என்பதை எந்த அளவுகோலை வைத்து அவர் கண்டுபிடித்தார் என்ற கேள்வியும் நமக்குள் இயல்பாகவே எழுகின்றது.

“இந்திய சமுதாயத்தைப் பற்றி – அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி நமக்கு எடுத்துக் கூற துங்கு அசிசும் நமக்குத் தேவையில்லை, பூதக் கண்ணாடி எதுவும் தேவையில்ல. வேதமூர்த்தி போன்று யாரும் இந்தியர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக துணையமைச்சராக நியமிக்கப்படத் தேவையில்லை. மாறாக, உள்ளங்கை நெல்லிக்காயாக இந்தியர் பிரச்சனை அரசாங்கத்திற்கு தெரிந்தே இருக்கின்றது. ம.இ.கா.வுக்கும் நன்கு தெரியும். அரசாங்கம் கொஞ்சம் மனது வைத்தால், கொஞ்சம் முன்வந்து முயற்சி எடுத்தால் இந்தியர்களின் பிரச்சனைகளை வேதமூர்த்தி போன்றவர்கள் இல்லாமலேயே அரசாங்கத்தாலும், ம.இ.கா.வின் மூலமாகவும் தீர்த்து வைத்துவிட முடியும்” என ம.இ.கா.கிளைத் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.