சென்னை, மே 26- பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.
சென்னை மந்தைவெளி மேற்கு சர்குலர் சாலையில் உள்ள சொந்த வீட்டில் குடும்பத்தினருடன் டி.எம். சவுந்தரராஜன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார். நேற்று மாலை 3.50 மணிக்கு டி.எம்.சவுந்தரராஜனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
டாக்டர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் டி.எம். சவுந்தரராஜன் உயிர் பிரிந்து விட்டது. டி.எம். சவுந்தரராஜன் உடல் மந்தைவெளியில் உள்ள வீட்டில் பொதுமக் கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல் – அமைச்சர் சார்பில் அமைச்சர்கள் வளர்மதி, செந்தில் பாலாஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேயர் சைதை துரைசாமி, பாலகங்கா எம்.பி. ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வர்த்தக காங்கிரஸ் தலை வர் எச்.வசந்தகுமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது கண்கலங்கினார். நடிகர் சிவகுமார், இசையமைப்பாளர் கணேஷ், பின்னணி பாடகர்கள் வாணிஜெயராம், சுரேந்தர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி, நடிகர்கள் பாக்யராஜ், எம்.எஸ். பாஸ்கர், டைரக்டர், டி.ராஜேந்தர், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, நடிகை சச்சு, கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
டி.எம். சவுந்தரராஜன் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூர் டி.ஜி.பி. ஆபீஸ் பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
மரணம் அடைந்த டி.எம். சவுந்தரராஜனுக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். பால்ராஜ், செல்வகுமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் இருக்கிறார்கள். டி.எம். சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. சவுராஷ்டிரா குடும்பத்தில் மீனாட்சி அய்யங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. கோவில் விழாக்களில் பக்தி பாடல்கள் பாடினார். அதன் பிறகு சினிமாவில் வந்து சகாப்தமானார்.