கோலாலம்பூர் – பல இனங்கள் வாழ்ந்து வரும் நமது மலேசிய திருநாட்டில் அனைவரும் இனம், மதம், மொழி தாண்டி வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்டு வாழ்ந்து வருவதே நமது தனித்துவமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதப்போதகர் டாக்டர் ஜாஹிர் நாயக் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்து நம்மிடையே வேற்றுமைகள் ஏற்படா வண்ணம் காவல்துறை நல்லதொரு முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் கூறியுள்ளார்.
“மலேசிய திருநாட்டின் சிறப்பை எடுத்துரைக்க உதாரணமாக புக்கிட் ரோத்தான் பற்றிக் குறிப்பிடலாம். இந்த இடத்தில் அருகருகே மசூதி, ஆலயம், தேவாலயம் ஆகியவை அமைந்துள்ளன. இது போன்று பல இடங்கள் நமது நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரையில் இங்கு மதம் சார்ந்து பிரச்சனைகள் எழுந்ததே இல்லை, இது தான் மலேசிய திருநாட்டின் சிறப்பு.
இந்த சிறப்புகள் குறித்து டாக்டர் ஜாஹிர் நாயக் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவை சேர்ந்த இவர் படித்த,மத போதகராக இருக்கலாம். ஆனால் இவரின் உரைகளை கேட்டால் ஒரு மதம் சார்ந்து மற்ற மதத்தை பற்றி இழிவாக பேசும் தன்மையை கொண்டவர் என்பதனை உணர முடியும். இந்த நிலைப்பாடு மலேசியாவின் நிலைத்தன்மைக்கு பொருந்தாது.
ஆகவே தனது மதத்தின் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்ளும் ஒருவரை அழைத்து வந்து கருத்தரங்கு செய்ய நினைப்பது அவசியமற்றது. மேலும் இவருக்கு கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை விதித்திருப்பதற்கு கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். தங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் இவரின் பேச்சு அமைந்திருப்பதும் காரணமாக இருக்கலாம்.
நல்ல கருத்துக்களை மதங்களுக்கு அப்பாற்பட்டு யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அதே நேரத்தில் அந்த கருத்துக்கள் மற்றவர்களை பாதிக்கும் வண்ணம் அமைந்துவிடக்கூடாது. மின்னல் எப்.எம் உள்ளிட்டவற்றில் இஸ்லாம் மதம் சார்ந்து நல்ல கருத்துக்கள் சொல்லப்படுவதை மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு இங்கு நிலவி வருகிறது.
மேலும் மலேசியர்கள் என்ற உணர்வோடு நமது ஒற்றுமையை மையப்படுத்தி அனைவரின் கருத்துக்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை தடை செய்திருக்கும் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் அவர்களுக்கும், காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் நல்லதொரு தீர்வு எட்டிவிட்ட நிலையில் இனி யாரும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம். எந்த நிலையிலும் நமது ஒற்றுமையை கைவிட்டு விடாது நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்”
-இவ்வாறு டி.மோகன் தமதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.