கொல்கத்தா, மே 27- ஆறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது மும்பை இண்டியன்ஸ்.
இதன்மூலம் 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது மும்பை இண்டியன்ஸ்.
முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதிர்ச்சி தொடக்கம்: முதல் ஓவரிலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மோஹித் சர்மா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த ஸ்மித், அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து ஆதித்ய தாரேவுடன் இணைந்த தினேஷ் கார்த்திக், பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினர்.
2-வது ஓவரை அல்பி மோர்கல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஆதித்ய தாரே போல்டு ஆனார். கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய தாரே, இந்த ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இதனால் 3.2 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை.
இதன்பிறகு கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார் அம்பட்டி ராயுடு. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்தது. கார்த்திக் 26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து மோரீஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது 9.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது மும்பை.
போலார்ட் அதிரடி: இதையடுத்து போலார்ட் களம்புகுந்தார். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய போலார்ட், மும்பை பெüலர்களை பதம்பார்த்தார். இதனால் 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது மும்பை.
பிராவோ வீசிய அடுத்த ஓவரில் ராயுடு போல்டு ஆனார். அவர் 36 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹர்பஜன் சிங், பிராவோ வீசிய 18-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டினார். அவர் 4-வது பவுண்டரிக்கு முயற்சித்தபோது மைக் ஹசியிடம் கேட்ச் ஆனார். அவர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்தவர்களில் ரிஷி தவன் 3, ஜான்சன் 1 ரன்னிலும், மலிங்கா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் வேகமாக ஆடிய போலார்ட், பிராவோ வீசிய கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை விரட்ட, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது மும்பை. கடைசி ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடித்தபோது 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் போலார்ட். அவர் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்தார்.
போராடிய தோனி: பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தொடங்கியது.
ரெய்னா 0, பத்ரிநாத் 0, பிராவோ 15, ஜடேஜா 0, விஜய் 18, மோர்கல் 10, மோரீஸ் 0 என அடுத்தடுத்து வெளியேற 11.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது சூப்பர் கிங்ஸ்.
ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் தனிநபராகப் போராடிய தோனி அதிரடியாக ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் அவருக்கு பக்கபலமாக விளையாடாததால், தோல்வி தவிர்க்க முடியாததானது. இதனால் சென்னை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தோனி 45 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியில் தோனி மட்டும் 63 ரன்கள் எடுத்தார். மற்ற 10 வீரர்களும் சேர்ந்து 53 ரன்களே எடுத்தனர். உதிரிகள் மூலம் 9 ரன்கள் கிடைத்தன.
மும்பைக்கு ரூ.10 கோடி பரிசு
கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணிக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.7.5 கோடியும், 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த ராஜஸ்தான் மற்றும் சன்ரைஸர்ஸ் அணிகளுக்கு தலா ரூ.3.75 கோடியும் கிடைத்தன.
மைக் ஹசி 733 ரன்கள்
இந்த ஐபிஎல் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹசி முதலிடத்தைப் பிடித்தார். 17 ஆட்டங்களில் விளையாடிய ஹசி 6 அரைசதங்களுடன் 733 ரன்கள் குவித்தார். இதற்காக ஹசிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. அவருக்கு அடுத்தபடியாக பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில் 16 ஆட்டங்களில் விளையாடி 708 ரன்கள் குவித்தார். இவர்களைத் தவிர வேறு யாரும் 700 ரன்களை எட்டவில்லை.
பிராவோ 32 விக்கெட்
இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் டுவைன் பிராவோ முதலிடம் பிடித்தார். 18 போட்டிகளில் விளையாடிய இவர், 62.3 ஓவர்களை வீசி 497 ரன்களைக் கொடுத்து 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
விடை பெற்றார் சச்சின்!
மும்பை அணி வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியாக பேசிய சச்சின், “இதுதான் எனது கடைசி ஐபிஎல் போட்டி. 6 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டேன். நான் ஓய்வு பெறுவதற்கான இதுதான் சரியான நேரம். எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’ என்று கூறி தனது ஓய்வு முடிவை வெளியிட்டார்.
முன்னதாக மும்பை வெற்றி பெற்றதும் ஹர்பஜன், ஓஜா ஆகியோர் சச்சினை தோளில் தூக்கி வைத்து வலம் வந்தனர். இது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது நடந்த கொண்டாட்டத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற சச்சினுக்கு வெற்றியை பரிசாக அளித்து பிரியா விடை கொடுத்தனர் மும்பை அணியினர்.
சுருக்கமான ஸ்கோர்
மும்பை-148/9 (போலார்ட் 60*, ராயுடு 37, கார்த்திக் 21, பிரோவா 4வி/42, மோர்கல் 2வி/12)
சென்னை-125/9 (தோனி 63*, விஜய் 18, ஜான்சன் 2வி/19, மலிங்கா 2வி/22, ஹர்பஜன் 2வி/14)