Home இந்தியா ‘கற்கும் பாரதம்’ திட்ட இலக்கை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு- ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு...

‘கற்கும் பாரதம்’ திட்ட இலக்கை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு- ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாராட்டு

562
0
SHARE
Ad

jeyalalithaசென்னை, மே 28- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்லாதோர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதியுடன், கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுத்தப்பட்டு வரும் “கற்கும் பாரதம்” என்னும் எழுத்தறிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்னும் சிறப்பை தமிழ்நாடு பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 17 லட்சத்து 26 ஆயிரம் கல்லாதோர் கற்றோராக மாற்றப்பட்டுள்ளனர். பதினோராவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், நலிவுற்றோர், குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் வகையில் 8.9.2009 முதல் “சக்ஷார் பாரத்” என்ற பெயரில் வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

#TamilSchoolmychoice

மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் “கற்கும் பாரதம்” என்னும் பெயரில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பெண்களின் எழுத்தறிவு உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய ஏழு மாவட்டங்கள் கண்டறியப்பட்டு இம்மாவட்டங்களிலிருந்து 17 லட்சத்து 46 ஆயிரம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் 3,152 மையங்களில் 6,304 மையப் பொறுப்பாளர்களால் வார நாட்களில் மாலை 3.00 முதல் 7.00 மணி வரை நடத்தப்பட்டு வருகின்றன. 2011-ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில், இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 555 கல்லாதோர் மட்டுமே கற்றோராக மாற்றப்பட்டனர்.

ஜெயலலிதா மூன்றாம் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மரபு வழி கற்பித்தல் முறையோடு இணைந்து கற்பிக்கப்படும் 40 மாதிரி வயதுவந்தோர் கல்வி மையங்களை அமைக்க உத்தரவிட்டார். இந்த மாதிரி மையங்களில் பயிலும் வயதுவந்தோருக்கு கணினியையும், நீர்மப் படப்பெருக்கி-ஐயும் பயன்படுத்தி ஏற்கெனவே தொகுக்கப்பட்ட அடிப்படை எழுத்தறிவுத் திட்டத்தை உள்ளடக்கிய மென்பொருளை இணைத்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிப்பாதையில் எடுத்துச் செல்லும் நோக்கோடும், இத்திட்டத்தில் பெண்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கும் லட்சியத்தோடும், தையல் பயிற்றுவித்தல், சோப்பு எண்ணெய் தயாரித்தல், செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்றவற்றை பயிற்றுவிக்க உத்தரவிட்டதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களில் 100 விழுக்காடு எழுத்தறிவு உள்ளவர்கள் என்ற இலக்கை எய்தும் 30 ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு, தகுதியுரையுடன் 50,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கவும் ஆணையிட்டார்.

ஜெயலலிதாவின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் 17 லட்சத்து 26 ஆயிரம் கல்லாதோர் கற்றோர்களாக மாற்றப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே இந்தத் திட்டத்தின் இலக்கை எய்திய ஒரே மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் இந்தச் சாதனையை பாராட்டி, மத்திய மனித வள மேம்பாடுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.