பெட்டாலிங் ஜெயா, மே 29 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஆர்பாட்டம் நடத்திய 21 மலேசியர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டாம் என மலேசிய அரசியல்வாதிகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசியாவில் கடந்த மே 5 ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, எதிர்கட்சிகளுக்கு ஆதரவாகக் கடந்த மே 8 மற்றும் 11 ஆம் தேதிகளில் சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் மெலன் பார்க் என்ற இடத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து 21 மலேசியர்கள் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின் வேலை உரிமத்தையும், மற்ற இருவரது சுற்றுலா விசாவையும் சிங்கப்பூர் அரசாங்கம் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த 21 மலேசியர்கள் கைது விவகாரத்தில் பல மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீடுகள் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக, கைது செய்யப்பட்டவர்களுக்கு உதவ முற்படுவதாகவும் வெளியுறவுத் துறை தனது வலைத்தளத்தில் அறிக்கை விடுத்துள்ளது.
அதோடு சிங்கப்பூர் அரசாங்கம் இது போன்ற வெளிநாட்டு விவகாரங்களில் மிக வலுவான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தங்களது உள்நாட்டு விவகாரங்களில் மலேசிய அரசியல் தலைவர்கள் தலையிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் பக்கத்தானைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கைது செய்யப்பட்ட 21 மலேசியர்கள் சார்பாக கோலாலம்பூரிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் கருணை மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.